Breaking News

நடிகராக அவதாரம் எடுக்கும் வெற்றிமாறன்.. யார் படத்தில் தெரியுமா?

 


இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'ட்ரெயின்' (Train). இப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது. எனவே 'ட்ரெயின்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகை டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் மிஷ்கின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். பவுசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பை கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில், 'ட்ரெயின்' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பல படங்களை இயக்கிய வெற்றிமாறன் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.