Breaking News

புலமை பரிசில் பரீட்சை மறுபரிசீலனை குறித்த அறிவிப்பு!


 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மறு பரிசீலனை விண்ணப்பங்கள் நவம்பர் 27 முதல் டிசம்பர் 04 வரை இணைய வழியில் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (16) இரவு வௌியாகி இருந்தன.

இந்த ஆண்டு பரீட்சைக்கு 332,949 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர், அவர்களில் 50,664 பேர் வெட்டுப்புள்ளிகளில் சித்தியடைந்துள்ளனர்.

அத்துடன் புலமைப்பரிசில் பரீட்சையின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தொடர்பிலான சிங்கள, தமிழ் மொழிமூல வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் கூறுகிறது.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கான சிங்கள மொழி மூல வெட்டுப் புள்ளி 154 ஆகும்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வெட்டுப்புள்ளி வரம்பு 150 ஆகவும், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை மாவட்டங்களில் 149 ஆகவும் உள்ளது.

அம்பாறை, புத்தளம், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் சிங்கள மொழி மூல வெட்டுப்புள்ளி 148 ஆகவும், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் 145 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளி 145 ஆகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் வெட்டுப்புள்ளி 144 ஆகவும் உள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கான தமிழ் மொழி மூல வெட்டுப் புள்ளி 147  என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.