வடக்கிற்கு அரசியல் தீர்வுடன் பொருளாதார வளர்ச்சி : ஜனாதிபதி உறுதி!
வடக்கிற்கான அரசியல் தீர்வை வழங்கி, அப்பகுதியை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
அத்தோடு, இஸ்ரேல் – காஸா பிரச்சினைக்கும் அரசியல் தீர்வின் ஊடாகவே நிலையான தீர்வு எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை உள்ளது. இந்த அறிக்கை மற்றும் சாட்சிகள் கத்தோலிக்க பேராயர் சபையின் தலைவரிடத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆராய்ந்து, எவ்வாறான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை எமக்கு அறியத்தருமாறு நாம் கோரியுள்ளோம்.
30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் அறிக்கைகளில் உள்ளமையால் இன்னமும் இவை தொடர்பாக அவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
இஸ்ரேல்- காஸா யுத்தம் தொடர்பான எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும், இதற்காக ஒட்டுமொத்த காஸாவையும் இஸ்ரேல் தாக்குவது எப்போதும் தீர்வாக அமையாது.
தற்போது லெபனானும் இதில் நுழைந்துள்ளது. எனவே, இதற்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றே அவசியமாகும்.
அரசியல் தீர்வொன்று வழங்கப்படாத காரணத்தினால்தான் அங்கு இந்த நிலைமை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
நாம் எமது நாட்டில் வடக்கிற்கான அரசியல் தீர்வை வழங்கி, தற்போது அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துள்ளோம்.
அடுத்த தசாப்தத்திற்குள் அங்கு பலமான அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு, பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.