இந்தியக் கப்பல் – சீனக்கப்பல் – நிர்மலா சீதாராமன் - நிலாந்தன் கட்டுரை!
இந்தியக் கப்பல் ஒன்று இலங்கைத் துறைமுகம் ஒன்றினுள் தரித்து நின்று வெளியேறிய சில நாட்களில், சீனக் கப்பல் இலங்கைக் கடலுக்குள் பிரவேசித்தது. அது சில நாட்கள் தரித்து நின்று ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட பின் வெளியேறிய கையோடு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு வந்தார்.அவர் வடக்கு கிழக்கிற்கும் வருகை தந்தார். அவர் வந்து போன கையோடு, சீனத் தூதுவர் வடக்கிற்கு வருகை தருகிறார். நாட்டில் என்ன நடக்கின்றது?
நாட்டின் ஜனாதிபதி கூறுகிறார், இந்தோ பசுபிக் மூலோபாயம் எனப்படுவது யதார்த்தமற்றது என்று.புவியியல் பாடங்களைப் பொறுத்தவரை அப்படி ஒரு பதம் 2000 ஆவது ஆண்டுகளுக்கு முன் பிரயோகத்தில் இருக்கவில்லை. ஆசிய பசிபிக் என்ற பிராந்தியப் பெயரே புவியியல் பாடப்புத்தகங்களில் காணப்பட்டது. ஆனால் சீனாவின் எழுச்சியும், பட்டியும் மண்டலமும் என்ற அதன் வியூகமும், மேற்கையும் இந்தியாவையும் அச்சுறுத்தத் தொடங்க, அதற்கு எதிரான ஒரு வியூமாகவே இந்தோ பசிபிக் மூலோபாயம் உருவாக்கப்பட்டது. அதாவது சீன விரிவாக்கத்தின் தர்க்கபூர்வ விளைவு அது. எனவே ரணில் விக்கிரமசிங்க கூறுவதைப் போல அது யதார்த்தமற்றது அல்ல. அதற்கு பின் ஒரு அரசியல் பொருளாதார ராணுவ தர்க்கம் இருக்கிறது.சீனாவை எதிர்கொள்வதற்கான மேற்கின் உபாயங்களும் இந்தியாவின் உபாயங்களும் அதில் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.
இந்து சமுத்திரத்தில் இந்தியாவிற்கு கீழே இருப்பதான அதன் புவியியல் அமைவிடம் காரணமாக,இலங்கைத் தீவுக்கு கேந்திரக் கவர்ச்சி அதிகம். இது இந்தியாவின் செல்வாக்கு மண்டலம். ஆனால் இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் பல நூற்றாண்டுகளின் பின் சீனா காலூன்றியிருக்கிறது. அம்பாந்தோட்டையில் சீனா 90 ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கப் போகிறது. துறைமுகப் பட்டினத்திலும் சீனாவின் பிடி இருக்கும். எனவே இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் வருகை என்பது வழமைக்கு மாறானது. அதற்கு காரணம், ஈழப் போர் தான்.இப்பொழுது சீனா இலங்கைக்குள் ஏறக்குறைய நிரந்தரமாக இறங்கிவிட்டது.
ஏற்கனவே மாலை தீவுகளில் சீனா பலமாகக் காலூன்றி விட்டது.எனினும் இந்தியா அங்கே தனக்குச் சாதகமான ஆட்சி மாற்றம் ஒன்றின் மூலம் தனது பிடியை அங்கே இறுக்க முயற்சித்தது. ஆனால் அண்மையில் நடந்த தேர்தலில் இந்தியாவை அகற்றுவோம் என்ற கோஷத்தோடு பிரச்சாரம் செய்த சீனாவுக்கு நெருக்கமான ஒரு தலைவர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார். அதாவது மாலை தீவுகளில் இந்தியாவின் புவிசார் அரசியல் பலன்கள் சகட யோக காரனுக்குரியவைகளாகக் காணப்படுகின்றன. அதாவது ஜோதிட விதிகளின்படி அடிக்கடி நிலை மாறும்.
இலங்கையிலும் அப்படித்தான். ஆயுத மோதல்களின் விளைவாக சீனா இலங்கை அரசாங்கத்தை மேலும் நெருங்கி வந்தது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பொழுது, ராஜபக்ச சகோதரர்கள் சீனாவை மேலும் நெருங்கி சென்றார்கள். அதனால் மேற்கு நாடுகள் ராஜபக்சக்களைக் கவிழ்ப்பதற்கு வாய்ப்புகளை உருவாக்க முயற்சித்தார்கள்.2015 ஆம் ஆண்டு அதில் தற்காலிகமாக வெற்றி பெற்றார்கள். மைத்திரிபால சிறிசேனவும் ரணிலும் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஆனால் அந்த வெற்றி மூன்றே மூன்று ஆண்டுகளுக்குத் தான் நீடித்தது. ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னணியில், கோத்தாபய ராஜபக்ஷ மீண்டும் பெரும் பலத்தோடு ஆட்சிக்கு வந்தார்.அவரை அகற்ற முடியாது என்று கருதியிருந்த ஒரு காலகட்டத்தில் கொரோனா வைரஸின் தொடர்ச்சியாக பொருளாதார நெருக்கடி நாட்டைக் கவ்வியது.அதன் பின் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த மாற்றங்களை மேற்கு நாடுகள் மறைமுகமாக ஊக்கிவித்தன. யாரும் எதிர்பாராத விதமாக ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்து துரத்தப்பட்டார்கள். அவர்களுடைய பதிலியான ரணில் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். அதாவது கத்தியின்றி ,ரத்தமின்றி, தேர்தல் இன்றி ஓர் ஆட்சி மாற்றம் கடந்த ஆண்டு நிகழ்ந்தது.
ரணில் விக்கிரமசிங்க மேற்கத்தியப் பாரம்பரியத்தில் வந்தவர். மேற்கத்திய ஒழுக்கத்தைக் கொண்டவர். சாதாரணமாக அவர் அணியும் ஆடைகளிலும் அதைக் காணலாம். சிங்கள பௌத்த பண்பாட்டு உடுப்போடு அவரை என்றைக்கும் பார்க்க முடியாது. ஆனால் அதற்காக அவர் சிங்கள பௌத்தத்தின் கைதியல்ல என்று பொருள் கொள்ள முடியாது. ரணில் விக்கிரமசிங்கவின் வருகையை இந்தியா விரும்பவில்லை என்று கருதப்பட்டது. ஆனால் மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை நிலமை ஒப்பீட்டளவில் பரவாயில்லை என்று கருதப்பட்டது.
ஆனாலும் ரணில் ஆட்சிக்கு வந்தபின் தெரிவித்து வரும் கருத்துக்கள் மேற்கு நாடுகளால் ரசிக்கப்படத் தக்கவையாக இல்லை. ரஷ்யா உக்ரைன் மோதலின் போது அவர் ஆசிய நாடுகளின் நோக்கு நிலையில் இருந்து கதைக்கத் தொடங்கினார். அதன்பின் அண்மையில் கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் மேற்கொண்ட விஜயங்களின் போது அவர் தெரிவித்த கருத்துக்கள் ஆசிய மையத்திலிருந்து மேற்கை விமர்சிப்பவை அப்பொழுதுதான் அவர் இந்தோ பசிபிக் மூலோபாயம் பற்றியும் கருத்துத் தெரிவித்திருந்தார் அதன் பின் ஜேர்மன் வானொலிக்கு அவர் வழங்கிய நேர்காணல் நேரடியாகவே மேற்குடன் முரண்படும் தன்மை மிக்கதாகக் காணப்பட்டது. அண்மையிலும் கொழும்பில் அவர் ஆற்றிய ஓர் உரையில் பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலில், மேற்கு நாடுகள் இரண்டுகத் தன்மை வாய்ந்த நிலைப்பாட்டை எடுப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
அதாவது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வந்தபின் மேற்கு நாடுகளுக்கு ஆர்வமூட்டும் விதத்தில் அல்லது உற்சாகமூட்டும் விதத்தில் கருத்து தெரிவிக்கவில்லை என்பது தொகுக்கப்பட்ட அவதானிப்பு ஆகும். ஆனால் அது அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நோக்கி அவர் வகுத்திருக்கும் உள்நாட்டுக் கொள்கையின் விளைவு என்றும் வியாக்கியானம் செய்ய முடியும். ஏனெனில் தாமரை மொட்டின் ஆதரவின்றி அவர் ஆட்சிக்கு வர முடியாது.எனவே தாமரை மொட்டின் வாக்கு வங்கியாகிய சிங்கள பௌத்த வாக்கு வங்கியை கவர்வதற்காக அவர் அவ்வாறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்று விளங்கிக் கொள்ளலாம்.தமிழ் பகுதிகளில் அவர் தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலப்பறிப்பு மற்றும் சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளையும் இந்த அடிப்படையில்தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.அத்துடன் கடனை மீள கட்டமைக்கும் விடயத்தில் சீனாவைத் திருப்திப்படுத்தவும் அவர் விரும்புகிறார்.
அப்பயென்றால் ஜனாதிபதித் தேர்தல் முடிந்தபின், அதில் அவர் தெரிவு செய்யப்பட்டால் அதன்பின் அவருடைய நிலைப்பாடு எப்படியிருக்கும்?
நிச்சயமாக,செங்குத்தாகத் திரும்ப முடியாது. ஏனென்றால் அவர் எந்த ஒரு பேரரசை நோக்கியும் முழுமையாகச் சரணடைய வேண்டிய ஒரு தேவையில்லாத இறந்த காலத்தைக் கொண்டிருக்கிறார்.ராஜபக்சக்களைப் போல அவர் மீது போர்க்குற்றச் சாட்டுக்கள் இல்லை. அவருக்கு எதிராக ஜெனிவா தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதும் இல்லை. அவர் மேற்கத்திய பாரம்பரியத்தில் வந்தவர் என்பதனால், பன்னாட்டு நாணய நிதியம் ,உலக வங்கி போன்றன அவரை ஒப்பிட்டுளவில் கையாள இலகுவான தலைவராக கருதுகின்றன.
இவற்றைவிட எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஐக்கியம் இல்லை. எதிர்க்கட்சிகள் மத்தியில் ஐக்கியத்தை ஏற்படுத்தி, ரணிலுக்குச் சவாலை உண்டாக்கக்கூடிய ஜன வசியமிக்க தலைவர்களைக் காண முடியவில்லை.எனவே இருக்கின்ற சிங்களத் தலைவர்களுக்கும் ரணில் பரவாயில்லை என்ற முடிவுக்கு மேற்கு வர முடியும்.
இது விடயத்தில் மேற்கு நாடுகளும் இந்தியாவும் ஒரே விதமான பார்வைகளையும் அணுகுமுறைகளையும் கொண்டிருக்கவில்லை. இடது சாரி மரபில் வந்த ஜேவிபி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் இரண்டு தரப்பும் ஒற்றுமையாகக் காணப்படுகின்றன. இலங்கையின் அரசாங்கம் எவ்வாறான வெளியுறவு அணுகுமுறைகளைக் கொண்டிருந்தாலும் இலங்கையின் சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பை பாதுகாக்க வேண்டும் என்ற முடிவு இரண்டு தரப்பிடமும் உண்டு.
குறிப்பாக இந்தியா பொருளாதார நெருக்கடியின்போது இலங்கைக்கு முதலில் உதவியது.எனைய எல்லா நாடுகளை விடவும் அதிகமாகவும் உதவியது. கடனை மீள கட்டமைக்கும் விடயத்திலும், இலங்கைக்கு கடனை பெற்றுக் கொடுக்கும் விடயங்களிலும் இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு ஆதரவாக உழைத்திருக்கிறார். அதனால் இலங்கை அரசில் அவருக்கு இருக்கும் நன்மதிப்பும் தொண்டமான் குடும்பம் அவரை இலங்கைக்குள் அழைப்பதற்கு ஒரு காரணம்.
மாலத்தீவுகளைப் போலவே இலங்கை விடையமும் சகட யோகத் தன்மை வாய்ந்ததாக காணப்படுவது மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் கவலை தரும் விடையங்கள்.
எனவே இலங்கை மீதான தமது பிடியை எப்படி இறுக்கலாம் என்று அவை சிந்திக்கின்றன. மேற்காசியாவில் மூண்டிருக்கும் யுத்தம், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முயற்சிக்கும் இலங்கை போன்ற நாடுகளுக்குப் பாதகமானது. இதனால் இலங்கை வெளியுலகில் தங்கியிருக்க வேண்டிய நிலைமைகள் மேலும் அதிகரிக்கலாம்.ரணில் விக்கிரமசிங்க வெளியுறவுப் பரப்பில் இப்பொழுதும் கயிற்றில்தான் நடந்து கொண்டிருக்கிறார். எல்லாப் பேரரசுகளையும் சமாளிப்பதற்கு புதிய தந்திரங்களை வகுக்க வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார். இந்தியாவையும் மேற்கையும் பொறுத்தவரை இலங்கையில் அவர்களுடைய நலன்கள் சகடயோகத்துக்கு உரியவைதான். அதேசமயம் பேரரசுகளின் இழிவிசைக்கு இருப்பது தான் இலங்கை அரசின் பேரபலமும்.ரணில் சுழித்துக் கொண்டு ஓடுவாரா ?