மாவீரர் நாளை முன்வைத்துத் தமிழ்க் கட்சிகள் சிந்திக்க வேண்டியவை – நிலாந்தன்!.
ஆயுதப் போராட்டம் நடந்த காலத்தில் மாவீரர் நாள் எனப்படுவது ஆயுதப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அப்பொழுது விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் ஒரு கருநிலை அரசு இருந்தது. கட்டுப்பாட்டு நிலம் இருந்தது. எனவே மாவீரர் நாள் ஓர் அரச நிகழ்வாக ஒழுங்கு செய்யப்பட்டது. மாவீரர்களின் குடும்பத்தவர்களுக்கு அரச அனுசரணையும் அரச வசதிகளும் கிடைத்தன. துயிலுமில்லங்களை அக்கருநிலை அரசு புனிதமாக, ஒரு மரபாகப் பராமரித்தது.
ஆனால் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் கடந்த 15 ஆண்டுகளாக நினைவு கூர்தலே ஒரு போராட்டமாக மாறியிருக்கிறது.
நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் இப்பொழுதும் தடை செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம் இப்பொழுதும் நடைமுறையில் உள்ளது. அதைத் திருத்தி ஒரு புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் எத்தனிக்கின்றது. இப்படிப்பட்டதோர் சட்டச் சூழலில், சட்டரீதியாகத் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை நினைவு கூர்வது சட்டப்படி குற்றமாகும்.
அந்த அடிப்படையில்தான் போலீசார் கடந்த 15 ஆண்டுகளாக நீதிமன்றங்களை நாடி நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கு எதிராக தடை உத்தரவுகளைப் பெற்று வருகிறார்கள். ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நீதிமன்றங்கள் அவ்வாறு தடை உத்தரவுகளைப் பிறப்பிப்பது இல்லை. சிலசமயம் நிபந்தனைகளோடும் சில சமயம் நிபந்தனைகள் இன்றியும் நினைவு கூர அனுமதிக்கப்படுகின்றது. குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் நினைவு கூர்தலுக்கான வெளி ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். மாவீரர் நாள் ஒப்பீட்டளவில் பரந்த அளவிலும் பெருமெடுப்பிலும் அனுஷ்டிக்கப்படும். இம்முறையும் அப்படித்தான். வடக்கில் பெரும்பாலான நீதிமன்றங்களில் நினைவு கூர்தலுக்குச் சாதகமாக முடிவுகள் வெளிவந்துள்ளன. கிழக்கில், மட்டக்களப்பிலும் அப்படித்தான்.
அதாவது கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நினைவு நாளுக்குமாக தமிழ் மக்கள் வழக்காட வேண்டியிருக்கிறது. நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கிறது. ஆனால் அது ஒரு சட்ட விவகாரம் மட்டுமல்ல. ஒரு சட்டப் போராட்டம் மட்டுமல்ல. அதைவிட ஆழமான பொருளில், அது ஓர் அரசியல் போராட்டம். அது ஒரு அரசியல் விவகாரம். அதனை அரசியல்வாதிகள் அரசியல் போராட்டமாக முன்னெடுக்க வேண்டும்.ஆனால் தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் அப்படி ரிஸ்க் எடுத்துப் போராடவும்,சிறைகளை நிரப்புவதற்காகப் போராடவும் தயாராகக் காணப்படுகின்றார்கள்?
சட்டதரணிகள் அதிகம் செலுத்தும் தமிழ்த் தேசிய அரசியலில், அது பெருமளவுக்கு ஒரு சட்டப் போராட்டமாகத்தான் காணப்படுகின்றது. அதை ஓர் அரசியல் போராட்டமாக ; நினைவு கூர்வதற்கான கூட்டுரிமைக்கான, பண்பாட்டு உரிமைக்கான,ஒரு போராட்டமாக முன்னெடுப்பதற்கு தமிழ் கட்சிகளால் முடியவில்லை. நினைவு கூரும் உரிமைக்காக மட்டுமல்ல ஏனைய எல்லா விடயங்களுக்காகவும் பொருத்தமான விதங்களில் தொடர்ச்சியாகவும் பெருந்திரளாக மக்களைத் திரட்டியும் போராட முடியாத தமிழ் கட்சிகள், நினைவு கூர்தலை ஒரு போராட்டமாக மாற்றி விட்டன.
2009க்கு பின்னரான நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் நினைவு கூர்தல் ஒரு பிரிக்கப்படவியலாத பகுதி என்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் இறந்த காலத்தைத் தத்தெடுக்கும் அரசியல்வாதிகள், ஆயுதப் போராட்டத்தின் நேர் வாரிசுகளாகத் தங்களை காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகள், அந்த ஆயுதப் போராட்டம் வெளிப்படுத்திய வீரத்தையும் தியாகத்தையும் பின் தொடரத் தயார் இல்லை.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு பொறுப்பு அதிகம். அக்கட்சி தன்னை ஆயுதப் போராட்டத்தின் நேர் வாரிசு போல காட்டிக் கொள்கிறது. விட்டுக்கொடுப்பற்ற சமரசத்துக்கு இடமற்ற ஒரு தரப்பாகவும் தன்னை காட்டிக் கொள்கின்றது. அப்படியென்றால், ஆயுதப் போராட்டத்தில் வெளிப்பட்ட வீரத்தையும் தியாகத்தையும் அக்கட்சியானது அறவழிப் போராட்டத்திலும் வெளிப்படுத்த வேண்டும்.
தையிட்டி விகாரைக்கு முன்பு ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் அக்கட்சி போராடி வருகிறது. திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு அக்கட்சி வடக்கு கிழக்காக வாகன ஊர்தியைக் கொண்டு போன போது திருகோணமலையில் திட்டமிட்டு இறக்கப்பட்ட சிங்கள மக்கள் அந்த ஊர்தியைத் தாக்கினார்கள். இது விடயத்தில் ஏனைய கட்சிகளை விடவும் முன்னணி ஒப்பீட்டளவில் ரிஸ்க் எடுக்கிறது என்பது உண்மை. ஆனால் அது போதாது. ஏனைய கட்சிகளை போராட்டத்துக்கு விசுவாசம் அற்றவை என்றும், உண்மையாகப் போராடாதவை என்றும், வெளிநாடுகளின் கைக்கூலிகள் என்றும், அதனால் நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கு தகுதியற்றவை என்றும் விமர்சித்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, தனக்கு அந்தத் தகுதி அதிகம் என்பதனை போராட்டக் களத்தில்தான் நிரூபிக்க வேண்டுமே தவிர நினைவு கூர்தல் களத்தில் அல்ல.
அதாவது ஆயுதப் போராட்டத்தின் நேரடி வாரிசுகளாக தங்களைக் கருதும் எந்த அரசியல்வாதியும் அந்த ஆயுதப் போராட்டம் வெளிப்படுத்திய வீரத்தினதும் தியாகத்தினதும் தொடர்ச்சியாகவும் தங்களை நிரூபித்துக் காட்ட வேண்டும்.ஆனால் அவ்வாறான வீரத்தையோ தியாகத்தையோ கடந்த 15 ஆண்டுகளிலும் எந்த அரசியல்வாதியிடமும் காண முடியவில்லை.
அதற்காக அவர்களை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லியோ இரத்தம் சிந்திப் போராடச் சொல்லியோ இக்கட்டுரை கேட்கவில்லை. மாறாக இப்போது இருக்கும் தமிழ்த் தேசிய அரசியலில் எங்கே அதியுச்ச தியாகமும் வீரமும் தேவைப்படுகின்றனவென்றால் அது தேசத் திரட்சியைப் பாதுகாப்பதில் தான். தமிழ் மக்களை ஒரு பெரிய மக்கள் கூட்டமாகக் கட்டியெழுப்புவதில்தான். அதற்குத்தான் அதிக புத்திசாலித்தனமும் தீர்க்கதரிசனமும் தேவைப்படுகின்றன. அதுதான் இறந்தவர்களின் ஆன்மாவைக் குளிரச் செய்யும். அதுதான் தியாகிகளுக்குச் செய்யும் உண்மையான வணக்கம். கடந்த 14 ஆண்டுகளாக தங்களுக்குள் தாங்களே உடைந்துடைந்து போகும் தமிழ்க்கட்சிகள் இறந்தவர்களுக்கு செய்யும் ஆகப்பெரிய மரியாதை அதுவாகத்தான் இருக்கும்.
2009க்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் எனப்படுவது மக்களை ஆகக்கூடிய பட்சம் ஒரு தேசமாகத் திரட்டுவதில்தான் தங்கியிருக்கின்றது. தேசியவாத அரசியல் எனப்படுவது மிகப்பெரிய திரளாக மக்களைக் கூட்டிக் கட்டுவதுதான்.ஆனால் எந்த ஒரு கட்சியாலும் அவ்வாறு மக்களை பெருந்திரளாகக் கூட்டிக்கட்ட முடியவில்லை என்பதைத்தான் கடந்த 15 ஆண்டுகளும் நிரூபித்திருக்கின்றன.
2009இல் கூட்டமைப்பு இருந்தது. அதிலிருந்து முதலில் 2010ல் கஜேந்திரகுமார் வெளியேறினார். அவருக்கு பின் 2015ல் தமிழரசு கட்சிக்குள் இருந்து பேராசிரியர் சிற்றம்பலம்,சிவகரன்,அனந்தி,அருந்தவபாலன்,உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் வெளியேறினார்கள். அதன் பின் ஈ.பி.ஆர்.எல்.எஃப் வெளியேறியது. அதன் பின் இடையிலே வந்த விக்னேஸ்வரன் இடையிலேயே வெளியேறினார். அதன்பின் தமிழ் மக்கள் பேரவைக்குள் ஒன்றாக நின்ற கட்சிகள் உடைந்து சிதறின. அதன் பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் உடைவு ஏற்பட்டு மணிவண்ணன் வெளியேறினார். அதன் பின் கூட்டமைப்பில் இருந்து பங்காளிக்கட்சிகள் வெளியேறின. அதன்பின் பங்காளி கட்சிகளும் விக்னேஸ்வரனும் சேர்ந்து ஒரு கூட்டை உருவாக்கவிருத்த பின்னணியில், விக்னேஸ்வரனும் மணிவண்ணனும் சேர்ந்து அக்கூட்டை விட்டு வெளியேற்றினார்கள்.
இப்பொழுது உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்குள் தலைமைத்துவ போட்டி எழுந்திருக்கிறது. அடுத்த தலைவர் யார் என்பதைத் தெரிவதற்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் . இத்தேர்தலில் போட்டியிடும் இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான மோதல் முகநூலில் ஒரு புதிய மோது களத்தைத் திறந்து விட்டிருக்கிறது. இரண்டு தலைவர்களுடைய விசுவாசிகள் மிகக் கேவலமாக ஒருவர் மற்றவரை வசை பாடுகிறார்கள். ஒருவர் மற்றவரைத் துரோகியாக்கப் பார்க்கின்றார்கள். இத்தனைக்கும் சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரே கட்சிக்குள் ஒன்றாக இருந்தவர்கள்.
இதுதான் மணிவண்ணன் கட்சிக்குள் இருந்து பிரிந்த போதும் நடந்தது. அங்கேயும் முன்னாள் தோழர்கள் பின்னாள் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டார்கள். கட்சி ரகசியங்கள் வெளியரங்கிற்கு வந்து நாறின. முன்னணிக்கும் மணிவண்ணனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை போலவே இப்பொழுது சிறீதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான மோதலானது முகநூலில் மற்றொரு அசிங்கமான மோதல் களத்தைத் திறந்து விட்டிருக்கிறது.
இப்படிப்பட்டதோர் அரசியற் சூழலில், சிதறிக்கொண்டு போகும் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இறந்தவர்களுக்கும் தியாகிகளுக்கும் செய்யும் ஆகக்கூடிய மரியாதை எதுவென்று சொன்னால் ஒரு தேசமாக திரண்டு காட்டுவதுதான். செய்வார்களா?