Breaking News

மாணவர்களைப் பொலித்தீனை உட்கொள்ள வைத்த அதிபர் இடமாற்றம்!

 


லன்ச் சீட் இல் கொண்டு வந்த உணவை லன்ச் சீட் உடன் உண்ணுமாறு பாடசாலை மாணவர்களை வற்புறுத்திய பாடசாலை அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வேறு பாடசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இந்த விடயத்தை குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

“உணவை உண்ட பின்னர் குறித்த லன்ச் சீட் மற்றும் பத்திரிகைகளை வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக தங்களின் பாடசாலை பைகளில் வைத்திருந்த போதும் அதிபர் அவைகளை எடுத்து உட்கொள்ளுமாறு வற்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்திற்கு முகங்கொடுத்த 7 மாணவர்களில் இரண்டு மாணவர்ளுக்கு ஏற்பட்ட வாந்தி மற்றும் வயிற்று வலி காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாடசாலை சூழலை பொலித்தீன் அற்ற சூழலாக பராமரிப்பதற்காக லன்ச் சீட் மற்றும் பத்திரிகைத் தாள்களை உட்கொள்ளுமாறு பாடசாலை மாணவர்களை வற்புறுத்திய சம்பவம் ரம்புக்பிடிய மகா வித்தியாலயத்தில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட 16 வயதான இரண்டு மாணவர்கள் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்திற்கு முகங்கொடுத்த ஏனைய ஐந்து மாணவர்களும் இன்று பாடசாலைக்கு வருகை தந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரினால் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸாருக்கும் நேற்று முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இலகுப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அதிபரை இடமாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.