Breaking News

2023க்கான வார்த்தை... என்ன தெரியுமா? காலின்ஸ் பதிப்பகம் அறிவிப்பு!

 


இங்கிலாந்து நாட்டின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் உள்ளது பிரபல ஆங்கிலோ-அமெரிக்க புத்தக பதிப்பகமான ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் (HarperCollins Publishers).

1817ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் புகழ் பெற்ற காலின்ஸ் அகராதி (Collins Dictionary) எனும் உலக மக்களிடையே மிகவும் பிரபலமான அகராதியை பல மொழிகளில் பதிப்பித்து வருகிறது.

பொது மக்களிடையேயும், பொது மேடைகளிலும், இணைய தளங்களிலும் அதிகம் புழக்கத்தில் உள்ள வார்த்தை எது என வருடாவருடம் காலின்ஸ் பதிப்பகத்தார், "காலின்ஸின் வருடத்திற்கான வார்த்தை" (Collins Word of the year) என கண்டறிந்து வெளியிடுவதும், மாணவர்கள், புத்தக பிரியர்கள் உட்பட பலரும் உலகெங்கிலும் ஒவ்வொரு வருடமும் அந்த வார்த்தை எது என ஆவலுடன் எதிர்பார்ப்பதும் வழக்கம்.

"2023 வருடத்திற்கான வார்த்தை" என காலின்ஸ் அகராதி வெளியிட்டுள்ள வார்த்தை, "ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்" எனப்படும் செயற்கை நுண்ணறிவின் சுருக்கமான "ஏ.ஐ" (AI).

இது குறித்து காலின்ஸ் அகராதி பதிப்பக நிர்வாக இயக்குனர் அலெக்ஸ் பீக்ராஃப்ட் (Alex Beecroft) தெரிவித்துள்ளதாவது:

எங்கள் நிபுணர்கள் வானொலி, தொலைக்காட்சி, இணையம், பொதுவெளி உரையாடல்கள் உள்ளிட்ட தளங்களில் இருந்து 20 பில்லியனுக்கும் மேற்பட்ட வார்த்தைகள் கொண்ட உள்ளடக்க கருவூலங்களை ஆராய்ந்து இந்த முடிவை அறிவித்துள்ளனர். மிக குறுகிய காலத்தில் வளர்ந்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, இந்த வருடம் ஏஐ தான் உலகின் பேசுபொருளாக இருந்தது. நம்மை அறியாமலேயே நமது அன்றாட வாழ்க்கைக்கான சாதனங்களிலும் அது மறைந்துள்ளது. எதிர்கால தொழில்நுட்பங்களிலும் ஏஐ நன்றாக இணைந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உலகெங்கும் ஏஐ-யின் தாக்கம் பல்வேறு தொழில்களில் மாற்றத்தை ஏற்படுத்த போவதாக பல முன்னணி நாட்டின் தலைவர்கள் கவலை தெரிவித்து, இதன் பயன்பாடு குறித்து சட்டதிட்டங்களை விரைவில் ஒருங்கிணைந்து வகுக்க வேண்டும் என கூறி வந்தனர்.

ஏஐ பயன்பாட்டில் கட்டுப்பாடு தேவை என்றும், இல்லையென்றால் அது மனித குலத்திற்கு ஆபத்தாக முடியும் என ஒரு சாராரும், செயற்கை நுண்ணறிவினால் நன்மையே என மற்றொரு சாராரும் காரசாரமாக சமூக வலைதளங்களிலும், பொது மேடைகளிலும், கருத்தரங்குகளிலும் விவாதித்து வருகின்றனர்.

திரையுலகம் உள்ளிட்ட பல துறைகளில் உள்ளவர்களின் மகன்கள் அல்லது மகள்கள், அதே துறையில் வளர்ச்சியும் வெற்றியும் பெற்றால் அவர்களை "நெபோ பேபி" (nepo baby) என அழைக்கின்றனர். இந்த வார்த்தை "2023க்கான வார்த்தை" பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாக காலின்ஸ் பதிப்பகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.