40 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆரம்பமான கப்பல் சேவை!
நாகப்பட்டிணம் மற்றும் காங்கேசன்துறைக்கும் ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது
குறித்த கப்பலினை கப்பல் துறை விமான சேவைகள் அமைச்சர் மற்றும் யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.
நாகப்பட்டிணம் மற்றும் காங்கேசன்துறைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் துறைமுகங்கள், கப்பல் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோர் குறித்த சேவையை இன்று ஆரம்பித்து வைத்துள்ளனர்.
நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் குறித்த நிகழ்வு இரண்டு முறைகள் ஒத்திவைக்கப்பட்டன.
விமான நிலையத்தின் நடைமுறைகளே நாகப்பட்டினம் துறைமுகத்திலும் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு பயணி, கப்பல் பயணத்தின் போது தன்னுடன் 50 கிலோ எடையிலான பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
அதில் 20 கிலோவை பயணி தன்னுடன் வைத்துக் கொள்ளும் படியாகவும், 30 கிலோ கப்பலில் வைக்கக்கூடிய பை என இரண்டாகப் பிரித்து வைத்திருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்திய கப்பல் பயணத்தில் இலங்கைக்குச் சென்றால் அவர் இந்தியா திரும்புவதற்கான விமானம் அல்லது கப்பல் பயணச் சீட்டை காண்பித்தால் மட்டுமே இலங்கைக்குச் செல்ல அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஆனால், இலங்கையைச் சேர்ந்த பயணிக்கு இந்த நடைமுறை பின்பற்றப்படாது.
குறித்த கப்பல் நாள்தோறும் காலை 7 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு 12 மணிக்கு சென்றடையும்.
அங்கிருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நாகப்பட்டிணத்தை வந்தடையும்.
இந்த பயணத்துக்கு பாஸ்போர்ட், விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் நடைமுறைகளைப் போலவே பயணிகளின் உடமைகள் சுங்கத்துறையினரால் கப்பல் பயணத்தின் போதும் பரிசோதனைக்குட்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினம் இலங்கை பயணிகள் கப்பல் சேவை இன்று காலை 8 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணிகள் கப்பலுக்கு ‘செரியபாணி என்றும் பெயரும் சூட்டப்பட்டுள்ளது,
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிப்பதற்கு ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து 7670 ரூபாய் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனை www.kpvs.in. . என்ற இணையதளத்திறன் மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்ககப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த கப்பல் சேவையின் மூலம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் வணிக நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் என உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்னவேல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியா விஜயத்தின் போது இதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்தப்பட்டதன் அடிப்படையில் குறித்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது,
அத்துடன் குறித்த கப்பல் சேவையின் ஆரம்பத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ZOOM வழியாக வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், இரு நாடுகளுக்கு இடையேயான நமது உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல் என்றும் இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் குறித்த கப்பல் சேவை இருக்கும் என தான் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதுடன், இந்த கப்பல் சேவைக்கு இந்திய பிரதமர் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இறுதியாக 1984 ஆம் ஆண்டு தலைமன்னாருக்கும் இராமேஷ்வரத்திற்குமிடையில் கப்பல் சேவை இடம்பெற்றிருந்த நிலையில், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் நாகப்பட்டினம் இலங்கை பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.