Breaking News

தவறான விஷயத்தை குழந்தைகளுக்கு புகுத்தாது- சிவகார்த்திகேயன் உறுதி!




ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, "தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று சொல்லியிருந்தோம். ஆனால் சின்ன சின்ன வேலைகள் இருந்ததால் பொங்கலுக்கு தள்ளி வைத்தோம். 'இன்று நேற்று நாளை' படத்தை பார்த்ததும் இயக்குனருக்கு போன் செய்து பேசினேன். அப்போது இயக்குனர் என்னை சந்திக்க வேண்டும் என்று கூறினார். அப்போதே முடிவு செய்துவிட்டேன் இவருடன் படம் பண்ண வேண்டும் என்று.

ரவிக்குமார் மேல் இருந்த நம்பிக்கையில் தான் இந்த படத்தை நான் ஒத்துக் கொண்டேன். 95 நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்துவிட்டார். இது போன்ற ஏலியன் வைத்து முன்னாடி எம்.ஜி.ஆர். ஒரு படம் செய்திருந்தார். அதன் பிறகு இப்போது நாம்தான் முயற்சி செய்கிறோம். தமிழ் சினிமாவில் அத்தனை வருடங்களுக்கு பிறகு இப்போது தான் இப்படி ஒரு கான்ஸ்செப்ட் வருது என்று முத்துராஜ் சார் சொன்னார்.

யூடியூபர்கள் எம்.ஜி.ஆருக்கு அடுத்தது நான் தான் என்று சிவகார்த்திகேயன் சொன்னார் என்று போட்டுவிடாதீர்கள். இன்னும் நிறைய சர்ப்ரைஸ் இந்த படத்தில் இருக்கிறது. குழந்தைகளுக்கு தவறான விஷயத்தை புகுத்தும் படமாக இந்த படம் இருக்காது " என்று பேசினார்.