Breaking News

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு கோரிக்கை!

 


யாழ்; பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரியுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையின் ஒரு அங்கமாகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்க பல்கலைக்கழகத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரை எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி நேரில் சமூகமளிக்குமாறு பல்கலைக்கழகப் பதிவாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்காகப் பொது நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், அரச பல்கலைக்கழக வளாகத்தில் அனுமதி பெறப்படாமல் தூபி அமைக்கப்பட்டுள்ளது என்றும் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முதற்கட்டமாகத் தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கடந்த 19 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக விடயம்சார் அறிவுடைய பொறுப்பு வாய்ந்த அதிகாரியொருவரின் வாக்குமூலமொன்றை பதிவுசெய்துகொள்ள வேண்டிய தேவையேற்பட்டுள்ளதால், கோரப்படும் ஆவணங்களுடன் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி காலை அதிகாரி ஒருவரை அனுப்பி வைக்குமாறு ஆணைக்குழுவினால் பதிவாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தன்மை தொடர்பிலான அறிக்கையொன்று, பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுச் சின்னமொன்றை தாபிக்கும் போது பின்பற்றப்படவேண்டிய நடமுறைகள் தொடர்பிலான அறிக்கையொன்று, நினைவுத் தூபியை நிர்மாணித்ததற்குரியதான கொள்முதல் கோப்பு மற்றும் அதன் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி மற்றும் நினைவுத் தூபியின் தற்போதைய நிலைமை தொடர்பிலான அறிக்கையொன்று போன்ற விடயங்களைச் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.