நீதித்துறையில் தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச நீதி கூட இல்லை – மாவை சேனாதிராஜா!
வடக்கு – கிழக்கு தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
உயிரச்சுறுத்தல் காரணமாக நீதிபதி நாட்டை விட்டு வெளியேறியமை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகுவதை சுட்டிக்காட்டியும், தமிழ்த் தேசிய கட்சிகள் எதிர்வரும் 20ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்நிலையில் நேற்று யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகசந்திப்பில் பேசிய மாவை சேனாதிராஜா, நீதித்துறையில் தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச நீதி கூட இல்லை என்ற நிலவரம் இந்த சம்பவத்தினால் உருவாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகின்ற நீதியை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்காமல், தமிழர்களுக்கு ஒரு பாதுகாப்பை உருவாக்க வேண்டிய தேவை சர்வதேச சமூகதிற்கு தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.