முல்லைத்தீவு புதிய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகள் ஆரம்பம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
நகரத் திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட புதிய மத்திய பேருந்து நிலையத்தின் வேலைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத நிலையில் 2020 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட போதும் இதுவரை காலமும் பயன்படுத்தப்படாமல் இருந்தது.
நகரத் திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த கட்டட தொகுதியானது மீள்திருத்தம் செய்யப்பட்டு சில வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருப்பினும் நூறு வீதம் வேலைகள் பூர்த்தியடையாத நிலையில் பேச்சுவார்த்தை ஒன்றின் ஊடாக ஆறு மாத காலப்பகுதிக்குள் மிகுதி வேலைகளை பூர்த்தி செய்து தருவதாக வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்றையதினம் மத்திய பேருந்து நிலைய கட்டடத்தொகுதியில் சேவையை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன், மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கணேசமூர்த்தி ஜெயபவானி, கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சண்முகதாசன், கரைதுறைப்பற்று பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி திணைக்களத்தின் பிரதிநிதி, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் இ.ஜெகதீசன், சமூக செயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், தனியார் பேருந்து உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.