Breaking News

ஆசிரியர் சங்கத்தினர் கொழும்பில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு ..

 


அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களையும் கலந்து கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளர் ஜெயராஜசிங்கம் போல்வின் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள நிலுவை தீர்க்கப்படாமையினால், ஆசிரியர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங் கொடுத்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது,

எதிர்வரும்  24ஆம் திகதி கொழும்பில் உள்ள மத்திய கல்வி அமைச்சுக்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சம்பள நிலுவை தொடர்பில் அரசாங்கத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தை நடத்திய போதும் இதுவரை தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவில்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளர் ஜெயராஜசிங்கம் போல்வின் விசனம் தெரிவித்தார்.

அதிபர் ஆசிரியர்களின் ஏனைய நிலுவைகள் மற்றும் நிர்வாகப் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளமையால் அவற்றை தீர்க்கும் முகமாக அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குவதற்காக போராட்டத்தை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு நிரந்தர தீர்வை காணும் முகமாக எதிர்வரும் 24 ஆம் திகதி அனைத்து ஆதிபர் ஆசிரியர்களும் கொழும்பில் இடம்பெறும் உரிமைப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.