Breaking News

முச்சக்கரவண்டிகள் “மீற்றர்” பொருத்துவது கட்டாயமானது!

 


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் “மீற்றர்” பொருத்துவது கட்டாயமானது. அதேவேளை, முறையான அனுமதி பெற்று நடத்தப்படும் எந்தப் பயணிகள் சேவையையும் தடுக்க முடியாது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று மாலை நடந்த விசேட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் தற்போது சேவையில் ஈடுபடும் ஓர் தனியார் முச்சக்கரவண்டிச் சேவை தொடர்பாகப் பிரஸ்தாபித்தனர்.

அந்தத் தனியார் நிறுவனத்தில் பதிவு செய்து சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் குறைந்த கட்டணத்தை வசூலிக்கின்றன என்றும் அதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது என்றும் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டிகளுக்கு “மீற்றர்” பொருத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு பணம் செலவிட்டு தாங்கள் மீற்றர் பொருத்திவரும் நிலையில், தனியார் நிறுவனத்தின் சேவை தங்களுக்கு வருமான இழப்பை ஏற்படுத்துகின்றது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அவர்களுக்குப் பதிலளித்த யாழ்ப்பாண மாவட்டச் செயலர், பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் “மீற்றர்” பொருத்த வேண்டும் என்பது சட்டம். அதில் எந்த மாற்றமும் செய்யமுடியாது. அதேவேளை, உரிய அனுமதி பெற்று மேற்கொள்ளப்படும் தனியார் நிறுவன பயணிகள் சேவையை தடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை என்று பதிலளித்தார்.

“மீற்றர்” பொருத்தப்பட்டு சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் தொடர்பிலும் பொதுமக்கள் முறைப்பாடுகளை முன்வைக்கின்றனர். மீற்றர் கட்டணத்துக்கு அதிகமாகச் சிலரால் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. ஆயினும், தனியார் முச்சக்கர வண்டிச் சேவை தொடர்பாக இதுவரை எந்த முறைப்பாடுகளும் எமக்குக் கிடைக்கவில்லை என்றும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் “மீற்றர்” பொருத்தாத குற்றச்சாட்டின் கீழ் 800 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் கூட்டத்தில் சுட்டிக்காட்டினர்.