சீனாவில் மீண்டும் கொரோனா போன்ற கொடிய தொற்று பரவும் அபாயம்- நிபுணர்கள் எச்சரிக்கை!
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூர நோய் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரை பறித்தது. தொடர்ந்து அந்த கொரோனா அரக்கன் உருமாறி பொதுமக்களை பாடாய் படுத்தியது.
இந்த தொற்றில் இருந்து உலக நாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு தற்போது தான் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது. இருந்த போதிலும் கொரோனா முழுமையாக நம்மை விட்டு அகலவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் சீனாவை அச்சுறுத்தும் வகையில் கொரோனா போன்ற கொடூர தொற்று நோய் மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டின் தொற்று நோய் நிபுணர் ஹி சென்க்ஸ் தெரிவித்துள்ளார். வவ்வால்கள் மூலம் இந்த பெருந்தொற்று வேகமாக பரவும் என அவர் எச்சரித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தலைமையிலான தொற்று நோய் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் 40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் பெற்று இருப்பதாகவும், இதில் பாதிக்கு மேல் மிகவும் ஆபத்தானது எனவும் கண்டறிப்பட்டு உள்ளது.
இந்த தொற்றில் 3 வகை மீண்டும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்றும் கொரோனா போன்ற தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால் சில தொற்று நோய் நிபுணர்கள் இதை மறுத்து உள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் வைரஸ் பரவும் என்பதை ஏற்க முடியாது. பொதுமக்களின் பாதுகாப்பு உணர்வே எதிர்காலத்தில் இது போன்ற வைரஸ் பரவலை தடுத்து விடும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.