Breaking News

லிபியா வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?- ஐ.நா. வெளியீடு!

 


வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த வாரம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பழமையான இரண்டு அணைகள் உடைந்து நகருக்குள் வெள்ளம் புகுந்தது. 

இதனால் பலி எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. முதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதன்பின் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர் எனத் தகவல் வெளியானது. 

இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தி ஐ.நா. வெளியிட்டுள்ளது. ஐ.நா.வுக்கான மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அதிகாரி, "3,958 பேர் உயிரிழந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக 11,300 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது திருத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். 

அதேவேளையில் 9 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக், "உலக சுகாதார அமைப்புடன் இணைந்து சரியான எண்ணிக்கை வெளிப்படுத்த இருக்கிறோம்'' என்றார். 

ஆனால், லிபியாவின் செஞ்சிலுவை சங்கம், வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் அதிகப்படியான உயிர்ப்பலி எண்ணிக்கையை ஐ.நா.வுக்கு வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. மிகவும் பாதிப்புக்கு உள்ளான டெர்னாவில் 1,20,000 மக்கள் வசித்து வருகின்றனர். 

ஒட்டுமொத்த நகரமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். அல்லது சேற்றில் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியானது. ரஷியா நடமாடும் மருத்துவமனை உள்ளிட்ட உதவிகளை செய்துள்ளது. இத்தாலி கப்பற்படைக்கு சொந்தமான கப்பலை அனுப்பியுள்ளது. அதில் தற்காலிக கூடாரம் அமைப்பதற்கான பொருட்கள், தண்ணீர் குழாய், டிராக்டர் போன்றவற்றை அனுப்பி வைத்துள்ளது.