Breaking News

மனித உரிமைகள் குறித்து மோடியிடம் வலியுறுத்தினேன்! - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

 


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவில் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்து உள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்திருந்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட ஜோ பைடன், மாநாடு நிறைவு பெறுவதற்குள் இந்தியாவில் இருந்து கிளம்பி வியட்நாமிற்கு சென்றார். 

பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியாவில் மனித உரிமைகள் அதிகளவில் மறுக்கப்படுவதாக செயற்பாட்டாளர்கள் மற்றும் உரிமை குழுக்கள் குற்றம்சாட்டி வருகின்றன. 2014 ஆண்டு நரேந்திர மோடி ஆட்சியில் பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினர்- குறிப்பாக இஸ்லாமியர்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்து இருப்பதாக பா.ஜ.க. தலைமையிலான அரசு மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. 

எனினும், இவை அனைத்தையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இது குறித்து ஹனோயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் ஜோ பைடன், இந்தியா அமெரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்து உள்ளார். 

இதோடு, "எப்போதும் நான் செய்வதை போன்றே, மனித உரிமைகளை மதிப்பது, அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் ஊடக சுதந்திரம் எப்படி வலுவான நாட்டை கட்டமைக்கும் என்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்," என்று அதிபர் பைடன் தெரிவித்து இருக்கிறார். 

சமீபத்தில் வெளியான ஊடக சுதந்திரம் தொடர்பான ஆய்வறிக்கையில், ஊடக சுதந்திரம் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 11 இடங்கள் பின்தள்ளி 180 நாடுகளில் 161-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது என்ற தகவல் வெளியானது.