Breaking News

பணக்கார கந்தனின் வருடாந்த திருவிழா பூஜைகள் தொடர்பான அட்டவணை!

 வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இது ஆடி அமாவாசைக்கு அடுத்த 06ம் நாள் ஆரம்பிக்கப்படும்.

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா விசாக்களை விரைவாகப் பெற்றுக் கொள்வதற்கும் சிரமங்கள் இன்றி வருகை தருவதற்கும் இலங்கை அரசாங்கம் தடைகளை தளர்த்தியுள்ளது.

இந்த நிலையில் பெருமளவான மக்கள் நல்லூர் கந்தன் தரிசனத்திற்கு வருகைத் தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

நாளை ஆரம்பமாகியுள்ள மகோற்சவ பெருவிழா எதிர்வரும் 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

அதன் படி கல்வியங்காட்டில் அமைந்துள்ள கொடிசீலை வழங்கும் செங்குந்தர் பரம்பரையை சேர்ந்தவரின் இல்லத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் இடம்பெற்று கல்வியங்காடு வேல் மடம் முருகன் ஆலயத்திற்கு கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டது.




அதனை தொடந்து வேல் மடம் முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று அங்கிருந்து கொடிச்சீலை சிறிய இரதத்தில் பருத்தித்துறை வீதி ஊடக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நல்லூரிலுள்ள செங்குந்த மரபினர் வருடந்தோறும் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் இன்று முதல் காலை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த போக்குவரத்து தடை எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் திகதி வரை நீடிக்குமென யாழ் மாநகர சபை அறிவித்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு செப்டம்பர் 16ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும் என யாழ் மாநகர சபை அறிவித்துள்ளது.

நல்லூர் ஆலய சுற்று வீதிகள் மூடப்பட்டிருக்கும் வேளையில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியினூடாக யாழ் நகரை அடைய முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியினூடாக மாத்திரமே பயணிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வாகனங்களை உட்கொண்டு செல்ல யாழ் மாநகர சபையினால் நிபந்தனையுடனான விசேட அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் நல்லூர் ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர வேறு; வாகனங்கள் உட் செல்ல அனுமதியில்லை எனவும் யாழ் மாநகர சபை தெரிவித்துள்ளது.

2023 வருடாந்தத் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நல்லூர் ஆலயநிர்வாகத்தினரும் யாழ்ப்பாண மாநகரசபையினரும் இணைந்து நிறைவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.