Breaking News

லூனா-25 தோல்வியால் உடல்நலம் பாதிப்புக்கு உள்ளான ரஷிய விஞ்ஞானி!


1959-ல் தொடங்கி 1976 வரை தொடர்ச்சியாக பல விண்கலன்களை ரஷியா நிலவிற்கு அனுப்பியது. அதில் 15 விண்கல பயணம் வெற்றிகரமாக அமைந்ததால் உலகைமே ரஷியாவை வியந்து பார்த்தது.

 ரஷியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்காஸ்மாஸ் (Roscosmos), நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி அங்குள்ள கனிம வளங்கள் உட்பட பல்வேறு விவரங்களை குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக லூனா-25 எனும் விண்கலத்தை இம்மாதம் வாஸ்டோச்னி காஸ்மோடிரோமிலிருந்து (Vostochny Cosmodrome) நிலவிற்கு அனுப்பியது. 

ஆனால், ஆகஸ்ட் 19 அன்று அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்து நொறுங்கியதால், இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இதுகுறித்து ராஸ்காஸ்மாஸ் நிலைய அமைப்பின் தலைவர் கூறியிருப்பதாவது:- நிலவிற்கு தொடர்ந்து விண்கலன்களை அனுப்பும் முயற்சிக்கு தடை போட கூடாது. அது ஒரு மோசமான முடிவாகி விடலாம். சுமார் 50 ஆண்டு காலம் இந்த முயற்சிகளை நிறுத்தி வைத்ததன் மோசமான பின்விளைவைத்தான் நாம் இப்போது அனுபவித்து வருகிறோம். 

அரசாங்கங்கள் இந்த திட்டத்தை இடைநிறுத்தம் செய்ததன் காரணமாக ஈடில்லாத நமது முந்தைய தலைமுறையினரின் தொழில்நுட்ப அறிவை நாம் கிட்டத்தட்ட இழந்து விட்டோம். இறங்குவதற்கான சுற்றுப்பாதைக்கு முன்னதான சுற்றுப்பாதையில் விண்கலத்தை நிலைநிறுத்தம் செய்ய வேண்டிய எஞ்சின் திட்டமிட்ட 84 வினாடிகளுக்கு பதிலாக 127 வினாடிகள் தொடர்ந்து செயல்பட்டது. 

இதனால் லூனா விழுந்து நொறுங்கியது. ஒரு தொழில்நுட்ப வல்லுனர்களின் குழு இதற்கான துல்லிய காரணங்களை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே இம்முறை ரஷியா அனுப்பிய லூனா-25 ஆராய்ச்சியில் பங்கு பெற்ற அனுபவம் வாய்ந்த 90 வயதான ரஷிய விண்வெளி ஆராய்ச்சியாளர் மிக்கெய்ல் மரோவ் (Mikhail Marov) இந்த தோல்வியினால் திடீரென உடல்நலம் குறைந்து, ரஷிய தலைநகரான மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் பகுதியில் அமைந்திருக்கும் மத்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இவர் ரஷியாவின் முந்தைய நிலவிற்கு விண்கலன்கள் அனுப்பும் முயற்சிகளில் பங்கேற்ற ஒரு தேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி வல்லுனராவார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது:- நான் எவ்வாறு கவலைப்படாமலிருக்க முடியும்? நான் மருத்துவ கண்காணிப்பில் உள்ளேன்.

 என்னுடைய வாழ்நாளின் ஆராய்ச்சி அனுபவம்தான் இந்த முயற்சி. இந்த தோல்வியால் என் உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்தியா, கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் தனது சந்திரயான் திட்டத்தின்படி, சந்திரயான் 3 எனும் விண்கலத்தை அனுப்பியுள்ளது என்பதும் தற்போது வரை திட்டமிட்டபடி தனது சுற்றுவட்டப்பாதையில் பயணிக்கும் இந்த விண்கலத்தை நாளை மாலை 06:04 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.