சர்வகட்சி மாநாட்டை நடத்தி மக்களை முட்டாளாக்கவே முயற்சி : ஜி.எல். பீரிஸ்!
13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த ஆளும் தரப்புக்குள்ளேயே இணக்கப்பாடு ஏற்படாத நிலையில், சர்வக்கட்சி மாநாட்டை நடத்தி மக்களை முட்டாளாக்கவே ஜனாதிபதி முற்படுகிறார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், மாகாணசபைத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக ஏதேனும் யோசனைகள் இருந்தால், இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி செயலத்தினால் அரசியல் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது அர்த்தமற்ற ஒரு செயற்பாடாகும். மக்களை முட்டாளாக்கும் ஒரு விடயமே இது. நாம் எப்படி யோசனைகளை முன்வைக்க முடியும்?
சர்வக்கட்சி மாநாடு நடைபெற்றபோது, பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம், 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னர் இருந்த 7 ஜனாதிபதிகளால் இதனை செய்ய முடியாமல் போனது. இதற்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும்.
மக்கள் ஆணை உள்ள ஜனாதிபதிகளாலேயே இதனை செய்ய முடியாவிட்டால், மக்கள் ஆணை இல்லாத ஒரு ஜனாதிபதியால் எப்படி செய்ய முடியும்?
அத்தோடு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு தான் நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் உள்ளது.
அந்தக் கட்சிக்கு இதில் உடன்பாடு இல்லை எனும் போது அரசாங்கம் இந்த செயற்பாட்டை எப்படி மேற்கொள்ளும்?
இந்த நிலையில், எமது யோசனைகளும் கோரப்பட்டுள்ளது.
யாரை ஏமாற்ற இதனை செய்ய வேண்டும்? இந்த செயற்பாட்டை வெற்றிகரமாக ஆரம்பிக்கும் முன்னர், அரசாங்கத்திற்குள் இணக்கப்பாடு ஏற்பாட வேண்டும்.
மாகாணசபைகள் அனைத்தும் இன்று செயலழந்துள்ளன. இதன் அதிகாரங்கள் அனைத்தும் ஜனாதிபதிக்கு கீழ் வந்துள்ளன.
அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமெனில் முதலில் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால், இப்போதைக்கு தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இருக்கும்போது, மக்களை முட்டாளாக்கும் வகையில்தான் ஜனாதிபதி இந்த செயற்பாட்டை மேற்கொள்கிறார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.