தேசிய மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பம்
விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் ஆகியன இணைந்து நடத்தி வந்த 47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பமாகின்றது.கொழும்பு சுகததாக விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 24, 25, 26ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள மெய்வல்லுநர் போட்டிகளுடன் 47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவுக்கு வருகிறது.
பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட நிலையில் மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பில் நடைபெறவுள்ளது.
மெய்ல்லுநர் போட்டிகள் வியாழக்கிழமை (24) காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியுடன் ஆரம்மாகவுள்ளது.
இருபாலாருக்குமான மெய்வல்லுநர் போட்டிகளில் மொத்தம் 34 பதக்க நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்கள் உட்பட 9 மாகாணங்களிலிருந்தும் 1,000க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.
இதில் மலையக வீர, வீராங்கனைகளும் பங்குபற்றவுள்ளமை விசேட அம்சமாகும்.
ஆரம்ப நாளன்று முதலாம் கட்ட மெய்வல்லுநர் போட்டிகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் நிறைவடையும்.அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3.00 மணியளவில் உத்தியோகபூர்வ ஆரம்ப விழா வைபவம் நடைபெறவுள்ளது. இந்த வைபவத்தின்போது பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
ஆரம்ப வைபவத்தைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட மெய்வல்லுநர் போட்டிகள் சில நடைபெறும்.
மெய்வல்லுநர் போட்டியின் கடைசி நாளன்று தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு விளையாட்டு நிகழ்ச்சியிலும் தெரிவான அதிசிறந்த வீரர், அதிசிறந்த வீராங்கனைகளுக்கு வெற்றிக் கிண்ணங்களுடன் சான்றிதழ்களும் பணப்பரிசுகளும் வழங்கப்படும்.
மெய்வல்லுநர் போட்டிகளிலும் அதிசிறந்த ஆண் மெய்வல்லநர், பெண் மெய்வல்லுநர் தெரிவு செய்யப்பட்டு பரிசில்கள் வழங்கப்படும்.
இதுவரை நடந்து முடிந்த பல்வேறு வகையான போட்டிகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் மேல் மாகாணம் அதிக பதக்கங்களை வென்று முதலிடத்தில் இருக்கிறது.
இது இவ்வாறிருக்க, சனிக்கிழமை நடைபெறவுள்ள பரிசளிப்பு வைபவம் மற்றும் முடிவு விழா வைபவத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.