உங்கள் நிழல்கூட உங்களை ரசிக்கும்.. டோனிக்கு ஹரிஷ் கல்யாண் வாழ்த்து!
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'டோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.
காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டோனி இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ஹரிஷ் கல்யாண் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "உங்கள் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.
உங்கள் நிழல்கூட உங்களை ரசிக்கும். நாங்களும் உங்கள் மீது அளவுக்கடந்த அன்பு வைத்திருக்கிறோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் டோனி சார்" என்று மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.