சீனாவை புரட்டி போட்ட 'டொக்சூரி' சூறாவளி- புயல் 7 லட்சம் பேர் பாதிப்பு!
பசிபிக் பெருங்கடலில் டொக்சூரி என்று பெயரிடப்பட்ட புயல் உருவானது. சூப்பர் சூறாவளி புயலாக வலுவடைந்து பிலிப்பைன்சை நெருங்கிய போது அதன் தீவிரத்தை சற்று இழந்தது. பின்னர் பிலிப்பைன்சை கடுமையாக தாக்கியது. ஆனால் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.
அதன் பின் தைவானை தாக்கிய டொக்சூரி புயல், தென் கிழக்கு சீனாவை நோக்கி நகர்ந்தது. இதில் புஜியான் மற்றும் குவாங்ஷோ மாகாணங்களை சூறாவளி புயல் தாக்கியது. சுமார் 175 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அதனால் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
புஜியான், குவாங்ஷோ மாகாணத்தை சேர்ந்த சுமார் 7 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 10 லட்சம் பேர் அவதியடைந்துள்ளனர். புயல் வலுவிழந்ததை அடுத்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் டொக்சூரி புயல் காரணமாக தலைநகர் பீஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாகாணங்களில் சிவப்பு எச்சரிக்கையை அந்நாட்டின் வானிலை மையம் விடுத்துள்ளது. புஜியான் மாகாணத்தில் கரையை கடந்து புயல், நாட்டின் வடக்கு பகுதியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது பீஜிங்கில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை 1-ந் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
பீஜிங்கில் பூங்காற்று ஏரிகள் மற்றும் ஆற்றங்கரை சாலைகள் மூடப்பட்டுள்ளன. தியான்ஜின், ஹெபே, ஷான்டாங் உள்ளிட்ட மாகாணங்களில் மழை பெய்து வருகிறது. சீனா, பிலிப்பைன்ஸ் தைவான் ஆகிய நாடுகளை புரட்டி போட்டுள்ளது டொக்சூரி. புயலில் சிக்கி 39 பேர் பலியாகி உள்ளனர்.