பச்சை-சிவப்பு: எந்த மிளகாய் ஆரோக்கியத்திற்கு நல்லது!
உணவுக்கு காரமும், சுவையும் சேர்ப்பதில் மிளகாய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது. காரமான உணவை விரும்புபவர்கள் மிளகாயின் சுவையை ரசிப்பார்கள். பச்சை மற்றும் சிவப்பு நிற மிளகாய்கள் அதிகமாக புழக்கத்தில் இருக்கின்றன.
இவற்றில் வைட்டமின் ஏ, பி 6, சி, இரும்பு, தாமிரம், பொட்டாசியம், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி பீட்டா கரோட்டின், கிரிப்டோக்சாண்டின், லுடீன்சாந்தின் போன்ற உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் பொருட்களும் உள்ளடங்கி இருக்கின்றன.
பச்சை மிளகாய் உணவில் காரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டாலும் அதனை சாப்பிடுவதால் பல்வேறு உடல்நல பிரச்சினைகளில் இருந்தும் விடுபடலாம் என்றும் ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. பச்சை, சிவப்பு இவற்றில் எந்த வகை மிளகாய் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும் என்பது குறித்து பார்ப்போம்.
* பச்சை மிளகாய் செரிமானத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. அதில் நார்ச்சத்து இருப்பதால் செரிமான செயல்முறை எளிதாக நடைபெற உதவும். மேலும் குடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
* பச்சை மிளகாய் எடையை குறைக்கவும் உதவுகிறது. ஏனெனில் இதில் கலோரிகள் இல்லை. அதேநேரத்தில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் துணை புரியும். இதில் இருக்கும் வைட்டமின் ஏ, கண்களுக்கும், சருமத்திற்கும் நன்மை தரும்.
* பச்சை மிளகாயில் இருக்கும் பீட்டா கரோட்டின் இதயம் நன்றாக செயல்பட உதவுகிறது. மேலும் பச்சை மிளகாய் சிறந்த ஆன்டி ஆக்சிடெண்ட் கொண்டது.
*பச்சை மிளகாயில் இருக்கும் வைட்டமின் சி சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக விளங்குகிறது. புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது.
ஆன்டி ஆக்சிடெண்ட் பண்புகளை கொண்டிருப்பதால் நுரையீரல் புற்றுநோய், வாய்வழி புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவு. பச்சை மிளகாய் நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு கவசமாக செயல்படுவதாக பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
* சமையலில் சிவப்பு மிளகாய் தூள் சேர்ப்பது உணவின் சுவையையும், நிறத்தையும் மேம்படுத்தும். பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாயின் ஊட்டச்சத்துக்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை. சிவப்பு மிளகாயை உலர்த்தும்போது, அதில் உள்ள நீரின் அளவு குறைந்துவிடுகிறது.
*சிவப்பு மிளகாயில் இருக்கும் கேப்சைசின் உடலில் உள்ள கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்தும். மனநிலையை மேம்படுத்தும் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உருவாகவும் தூண்டும்.
மேலும் சிவப்பு மிளகாயில் போதுமான அளவு வைட்டமின் சி உள்ளது. இது மற்ற வைட்டமின்கள் உடலில் போதுமான அளவு உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்கவும், நோய்களுக்கு எதிராக போராடவும் துணைபுரியும்.