Breaking News

நிலத்தடி சுரங்கத்தில் தங்க அனுமதிக்கும் உலகின் மிக ஆழமான ஹோட்டல் !

 


இங்கிலாந்தில் நிலத்தடி சுரங்கத்தில் விருந்தினர்களை தூங்க அனுமதிக்கும் வகையில் உலகின் மிக ஆழமான ஓட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள விக்டோரியன் சுரங்கத்தின் அடிப்பகுதியில் 400 மீட்டர் நிலத்தடியில் திறக்கப்பட்டுள்ள இந்த டீப் ஸ்லீப் ஓட்டல், வடக்கு வேல்ஸில் எரிரி தேசிய பூங்கா என்று அழைக்கப்படும் ஸ்னோடோனியாவின் மலைகளுக்கு அடியில் அமைந்துள்ளது. 

டீப் ஸ்லீப் ஹோட்டலில் நான்கு தனியார் இரட்டை படுக்கை அறைகள் மற்றும் இரட்டை படுக்கையுடன் கூடிய ரொமான்டிக் அறை உள்ளது. இது வாரத்தில் ஒரு நாள், சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். விருந்தினர்கள் தங்குமிடத்தை அடைய, முதலில் விக்டோரியன் ஸ்லேட் சுரங்கத்தின் வழியாக பயண உதவியாளருடன் மலையேற வேண்டும்.

 சுரங்கத்தின் கீழே பயணம் செய்ய பண்டைய சுரங்க படிக்கட்டுகள், பழைய பாலங்கள் மற்றும் ஸ்கிராம்பிள்களை கொண்டு பயணிக்க வேண்டும். ஒரு மணி நேர மலையேற்றத்தின் போது, ஒரு பயிற்றுவிப்பாளர் சுற்றுச்சூழல் பற்றிய ஏராளமான வரலாற்று தகவல்களை வழங்குவார். 

விருந்தினர்களுக்கு பயணத்திற்கு முன் ஹெல்மெட், லைட், சேணம் மற்றும் பூட்ஸ் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகிறது. இடத்தை அடைந்த பிறகு, ஓட்டலில் தங்கும் விருந்தினருக்கு சூடான பானமும் மாலை முழுவதும் ஓய்வெடுக்க நேரமும் வழங்கப்படுகிறது. 

சைவ மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்படுகிறது. பின்னர் ஆழ்ந்த உறக்கத்திற்காக படுக்கை அறைகளும் உள்ளன. ஒரு தனியார் கேபினில் இருவர் தங்குவதற்கு ஒரு இரவிற்கு ரூ. 36,003 வசூலிக்கப்படுகிறது. அதே சமயம் ரொமான்டிக் அறையில் இருவர் தங்க ரூ. 56,577 வசூலிக்கப்படுவதாக ஓட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.