பச்சிளம் குழந்தையை பச்சைத்தண்ணீரில் குளிப்பாட்டலாமா?
பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது என்பது புதிய பூவை கையாள்வதை போன்றது. தவறாக குளிப்பாட்டுதல் குழந்தையின் ஆரோக்கியத்துக்கே ஆபத்தை தந்துவிடும். பச்சிளம் குழந்தைகளை எத்தனை நாள்களுக்கொரு முறை தலைக்கு குளிப்பாட்ட வேண்டும்? எத்தனை வயதுவரை வெந்நீரில் குளிப்பாட்ட வேண்டும்? கோடைக்காலத்தில் பச்சைத்தண்ணீரில் குளிப்பாட்டலாமா? என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பச்சிளம் குழந்தைகளுக்கு வாரத்துக்கு மூன்று நாள்களுக்கு தலைக்குக் குளிப்பாட்ட வேண்டியது அவசியம்.
குழந்தைகளை ரொம்ப நேரம் குளிக்க வைக்க வேண்டாம். அதிகபட்சமாக 5 நிமிடங்களுக்குள் குளிக்க வைத்துவிடுவது சிறப்பு. பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், குழந்தைகளுக்கான ஷாம்பு அல்லது சோப் சொல்யூஷன் போட்டுக் குளிப்பாட்டலாம்.
குழந்தைகளை அதிக நேரம் குளிப்பாட்டுவதால் நன்றாகத் தூங்குவார்கள் என்றெல்லாம் நினைத்து அப்படிச் செய்யத் தேவையில்லை. குழந்தைக்கேற்ற ஷாம்பூ மற்றும் சோப் உபயோகித்துக் குளிப்பாட்ட வேண்டியதும் அவசியம்.
குழந்தையைக் குளிப்பாட்ட ஆவி பறக்கும் வெந்நீர் தேவையில்லை. சரியான சூடுதானா என்பதை முதலில் உங்கள் முழங்கையில் ஊற்றி சரி பாருங்கள். குழந்தையின் சருமம் அந்தச் சூட்டைத் தாங்குமா என்றும் பாருங்கள். வெதுவெதுப்பான சூடு இருந்தால் போதுமானது.
கோடைக்காலத்திலும் குழந்தையின் சருமம் பொறுக்கும் அளவு சூட்டில் உள்ள நீரில் குளிப்பாட்டலாம். ரொம்பவும் சூடான நீரை ஊற்றிக் குளிப்பாட்டினால் அவர்களுக்குத் தாங்க முடியாது.
எப்போதுமே குழந்தையைக் குளிப்பாட்ட ரொம்பவும் குளிர்ந்த நீரும் வேண்டாம், அதிக சூடான நீரும் வேண்டாம். குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டுவதற்கு சிறிது நேரம் முன்போ குளிப்பாட்டிய பிறகு சிறிது நேரம் கழித்தோ தான் பால் புகட்ட வேண்டும்.