கஜேந்திரகுமாரின் சிறப்புரிமைகள் மீறப்பட்டன? நிலாந்தன் கட்டுரை!
படைப்புலனாய்வாளர்கள் அரசியல் கூட்டங்கள் ஊர்வலங்களுக்கு வருவது கடந்த 14 ஆண்டு கால தமிழரசியலில் புதியது அல்ல. ஏன் தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சி போராட்டங்களின் பின் அங்கேயும் நிலைமை அப்படித்தான் காணப்படுகிறது.பொதுவாக படைப்புலனாய்வுத்துறை எதிர்க்கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை புலனாய்வு செய்வதற்கு மாறு வேடங்களிலும் வரும். அல்லது வெளிப்படையாகவும் வரும் 2009க்கு பின் யாழ்ப்பாணத்தில் நடக்கும் கூட்டங்களில்,ஏன் இலக்கிய கூட்டங்களில்கூட படைப்புலனாய்வுத்துறை வெளிப்படையாக தன் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது உண்டு.வொய்ஸ் ரெக்கோர்டரை வெளிப்படையாகவே அங்குள்ள ஒலிபெருக்கி பெட்டிகளின் மீது வைப்பதுண்டு. ஊர்வலங்களின் போதும் ஆர்ப்பாட்டங்களின் போதும் அவர்கள் சகஜமாக வந்து நிற்பார்கள். 2009 க்கு பின்னரான சில கவன ஈர்ப்பு போராட்டங்களில் அதிக தொகையாக அவர்களே நின்றதும் உண்டு.
அதில் இரண்டு நோக்கங்கள் உண்டு. ஒன்று,கண்காணிப்பது.இரண்டு, அச்சுறுத்துவது.எனவே அரச புலனாய்வுத்துறை ஒரு கட்சியின் அரசியல் கூட்டத்திற்கு வந்தமை என்பது இலங்கைத்தீவைப் பொறுத்தவரை அதிலும் தமிழ் அரசியலைப் பொறுத்தவரை ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல.தமிழ் மக்கள் ஏன் ராணுவ மயநீக்கத்தைக் கேட்கிறார்கள் என்பதற்கு அதுவும் ஒரு காரணம்.
எனினும்,மருதங்கேணிச் சம்பவமானது ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்குக்குள்ள மதிப்பு எவ்வளவு? என்ற கேள்வியை எழுப்புகிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பங்குபற்றிய கூட்டத்தில் இலங்கைத் தீவின் அரசு புலனாய்வுத் துறையம் காவல்துறையும் நடந்து கொண்ட விதம் அவமதிப்பானது அச்சுறுத்தலானது.அதை எல்லாக் கட்சிகளும் கண்டிக்க வேண்டும். ஒரு நாடாளுமன்ற நாடாளுமன்ற உறுப்பினரை அவ்வாறு அவமதிக்கலாம் என்றால் சாதாரண ஜனங்களின் நிலை எப்படி இருக்கும்?
துப்பாக்கியோடு நின்றவர் தப்பி ஓடிவிட, மற்றவரை கட்சிக்காரர்கள் பிடித்து விடுகிறார்கள்.அவரிடம், நாடாளுமன்ற உறுப்பினரும் அவருடைய ஆதரவாளர்களும் திரும்பத்திரும்ப கேட்கிறார்கள் உன்னுடைய அடையாளத்தை உறுதிப்படுத்து என்று.ஆனால் அவர் அதற்கு திட்டவட்டமாக மறுத்து விடுகின்றார்.அவரை பாதுகாக்க முற்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்களும் நாடாளுமன்ற உறுப்பினரை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. கடைசியாக வந்த ஒரு சப் இன்ஸ்பெக்டர் கொஞ்சம் பரவாயில்லாமல் நடந்து கொள்கிறார். ஆனாலும் ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை புலனாய்வுத்துறை ஆட்களும் போலீசாரும் எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு அது ஒரு உதாரணம் .
சம்பவத்தின் தொடக்கத்தில், புலனாய்வு உறுப்பினர் ஒருவர் கட்சிக்காரர்களிடம் பிடிபடாமல் விலகி ஓடுகிறார்.அவரைத் தடுக்க முயன்ற நாடாளுமன்ற உறுப்பினரைத் தாக்கிவிட்டு ஓடுகிறார்.ஆனால் அந்த இடத்தில் சூழ்ந்திருந்த பொது மக்களில் எத்தனை பேர் அவரை பின்தொடர்ந்து ஓடுகிறார்கள் என்று பார்த்தால், கட்சிக்காரர்கள் சிலர்தான் அவரைத் துரத்திக் கொண்டு போகிறார்கள். இது எதைக் காட்டுகின்றது?சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுவதைப் போல மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்வதா?
அதிலும் உண்மை உண்டு. மக்கள் பெரும்பாலான சம்பவங்களில் பார்வையாளர்களாகவே இருக்கிறார்கள். தையிட்டியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் ஒரு தனி ஆளாக பற்றைகளுக்குள் உறங்கும் பொழுதும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். இப்பொழுதும் அந்த கட்சி தையிட்டியில் நடத்தும் கவன ஈர்ப்பு போராட்டம் சிறு திரள் கவன ஈர்ப்பு போராட்டமாகத்தான் காணப்படுகிறது. அது ஒரு பெருந்திரள்போராட்டமாக வடிவமைக்கப்படவில்லை. அந்த கட்சிக்கு வாக்களித்த மக்கள் கூட நடக்கும் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.ஆனால் அது அந்தக் கட்சிக்கு மட்டும் அல்ல ஏனைய கட்சிகளுக்கும் பொருந்தும்.எல்லா கட்சிகளுமே மக்களை பார்வையாளர்களாகத்தான் வைத்திருக்கின்றன.விமர்சன பூர்வமாக-க்ரிட்டிக்கலாக- சிந்திக்கும் வாக்காளர்களாக கூட அவர்களை மாற்றவில்லை. எனவே இது போன்ற சந்தர்ப்பங்களில் அவர்கள் சாட்சிகளாக நிற்கக்கூடிய நிலைமைகளே அதிகம் உண்டு.
ஆனால் தையிட்டிலும் வடமராட்சி கிழக்கிலும் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்கள் தனியே விட்டார்கள் என்று கொச்சையாகக் கூற முடியாது.ஏனென்றால் இந்த இரண்டு விடயங்களிலும் பாதுகாப்பு ஒரு பிரச்சினை.தையிட்டியில் போராட்டம் நடப்பது உயர் பாதுகாப்பு வலையத்துள். ஏற்கனவே அங்கே போராடப்போன கட்சிக்காரர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். எனவே மக்கள் ரிஸ்க் எடுக்க பயப்படுவார்கள்.அது போலவே கஜேந்திரகுமாரின் மருதங்கேணிச் சந்திப்பிலும் அதில் பங்குபற்றிய விளையாட்டு கழகத்தைச் சேர்ந்தவர்கள் கட்சி சாராதவர்களாக இருக்கலாம். மேலும் அவர்கள் ஒரு புலனாய்வுத்துறை ஆளை, அதுவும் கைத் துப்பாக்கியோடு இருக்கும் ஒருவரை துரத்திக் கொண்டு போவதற்கு அஞ்சியிருக்கக்கூடும்.
தமிழ்மக்கள் இப்பொழுதும் அச்சத்தில் இருந்து முற்றாக விடுபடவில்லை. ஆயுதப் போராட்டம் இருந்தவரையிலும் ஒருபுறம் தமிழ் வீரமானது போற்றிக் கொண்டாடப்பட்டது.இன்னொருபுறம் போராட்டத்தில் நேரடியாக சம்பந்தப்படாத மக்களை பொறுத்தவரை ஒரு பயங்கரமான அச்சம் அவர்களை அமுக்கி வைத்திருந்தது.ஆயுதப் போராட்ட நடவடிக்கைகள் அரசாங்கத்தையும் அரச படைகளையும் ஆத்திரப்படுத்தும். அந்த ஆத்திரத்துக்கு இலக்காக கூடாது என்ற தற்காப்புணர்வு சாதாரண தமிழ் மக்களிடம் இருக்கும்.எல்லா ஆயுதப் போராட்டங்களின் போதும் சாதாரண ஜனங்கள் மத்தியில் ஒருவித அச்ச ச்சூழல் நிலவும்.அந்தப் பயபிராந்திதான் ஒடுக்குபவர்களின் பலமே.அந்தப் பயத்தை அகற்றுவதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிடத்தக்க அளவிற்கு பங்காற்றியிருக்கிறது என்பது உண்மை. ஆனாலும் அது போதாது. அந்த பய உளவியலில் இருந்து மக்கள் வெளியே வரும் பொழுதுதான் மக்கள் போராட்டங்கள் அவற்றின் அடுத்த கட்டத்திற்கு வளரும்.
கடந்த காலங்களில் சில சமயங்களில் மக்கள் அவ்வாறு வெளியே வந்திருக்கிறார்கள். குறிப்பாக பொங்கு தமிழ்கள்; எழுக தமிழ்கள்; பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிகள் போன்றவற்றில் மக்கள் வெளிப்படையாகத் துணிந்து வருகிறார்கள். ஆனால் நினைவு நாட்களின் போது எல்லாருமே ரிஸ்க் எடுக்கத் தயார் இல்லை. குறிப்பாக மே 18ஐ நினைவு கூரும் பொழுது எல்லா ஆலயங்களிலும் மணிகளை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாக கேட்கப்படுகிறது. எந்த ஒரு மதப் பிரிவினரும் அதற்கு தயார் இல்லை. குறிப்பிட்ட நினைவு நாட்களின் பொழுது எல்லாருடைய வீடுகளிலும் ஒரு சிறு சுட்டியையாவது ஏற்றி வைக்குமாறு கேட்கப்படுகிறது.ஆனால் பெரும்பாலான பொதுமக்கள் ரிஸ்க் எடுக்க தயார் இல்லை.கட்சித் தொண்டர்களும் தயார் இல்லை. அந்த கட்சிகளுக்கு வாக்களித்த மக்களும் தயார் இல்லை. மிகச்சில அரசியல் செயற்பாட்டாளர்களும் கட்சித் தலைவர்களும் தான் தங்கள் தங்கள் அலுவலகங்களில் விளக்குகளை ஏற்றுகிறார்கள்;சுட்டிகளை ஏற்றுகிறார்கள்.இது கடந்த 14 ஆண்டுகளாக காணப்படும் ஒரு பொதுப் போக்கு. மக்கள் இப்பொழுதும் பயப் பிராந்திக்குள் வாழ்கிறார்கள்.14 ஆண்டுகளிலும் பயப்பிராந்தி ஒப்பீட்டளவில் குறைந்து வருகிறது என்பது உண்மை. ஆனால்.அது முழுமையாக நீங்க வில்லை என்பதைத்தான் தையிட்டியிலும் மருதங்கேணியிலும் பார்க்கக் கூடியதாக இருந்தது.
மக்களுக்கு எப்பொழுது பயம் நீங்கும்? அவர்கள் தங்களை உதிரிகளாக உணராத பொழுது அவர்களுடைய பயம் போகும். தங்களை ஒரு திரளாக உணரும் பொழுது;தங்களை ஒரு பலமான கூட்டாக உணரும்பொழுதே மக்களின் பயம் நீங்கும்.
மக்கள் எப்பொழுது அச்சத்தில் இருந்து வெளியே வருகிறார்கள் என்றால், மக்கள் ஒரு திரளாக மாறும் பொழுதுதான். இதுதான் அடிப்படை விதி.அதை ஒரு விதத்தில் கும்பல் பலம் அல்லது குழு மனோபாவம் என்று கொச்சைப்படுத்துவோர் உண்டு.ஆனால் அதுதான் உண்மை.மக்கள் குழுவாகத் திரளும் பொழுது அவர்களின் பயம் குறையும்.உதிரிகளாக நிற்கும் பொழுது பயம் அதிகரிக்கும். திரளாக மாறும் பொழுது பயம் குறையும். திரள் பெருக்கப் பெருக்க பயமும் குறையும்
.கடந்த 14 ஆண்டு கால தமிழ்த் தேசிய அரசியலில் அதற்கு உதாரணங்கள் உண்டு. அதற்கு முன்னரும் உதாரணங்கள் உண்டு. குறிப்பாக நாலாங்கட்ட ஈழப் போரின் போதும் மக்கள் அவ்வாறு போராடியிருக்கிறார்கள். அன்றைக்கு அந்த போராட்டங்களுக்கு மனிதநேய அமைப்புக்களின் ஒன்றியம் என்ற சிவில் அமைப்பு தலைமை தாங்கியது. அன்றைக்கு இருந்த பயங்கரமான மோதல் களம் ஒன்றில், அச்சச் சூழலில் அந்த அமைப்பு மக்களை அணிதிரட்டியது; தலைமை தாங்கியாது. எனவே மக்களைத் திரளாக்குவதற்கு முதலில் தலைமை தாங்க அமைப்புகள் வேண்டும்.இரண்டாவதாக தாங்கள் உதிரிகள் அல்ல என்று மக்களை உணரச் செய்ய வேண்டும்.கூட்டுப்பயம் நீங்கினால் மக்கள் கூட்டாகத் திரண்டெழுவார்கள்.ஆனால் தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்கள் தங்களை ஒரு திரளாக உணரவைக்கத் தவறிவிட்டன.
குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அதில் அதிகம் பொறுப்பு உண்டு. ஒரு நாடு இரு தேசம் என்று சொல்லி தேசத்தை பற்றி அதிகமாகவும் அழுத்தமாகவும் தொடர்ச்சியாகவும் கதைத்த ஒரே கட்சி அது. கடந்த 14 ஆண்டு கால பகுதிக்குள் அந்த கட்சி புதிதாக வென்றெடுத்த ஆதரவாளர்களின் தொகை எவ்வளவு?இழந்த நண்பர்களின் தொகை எவ்வளவு? என்று ஒரு கணக்கெடுப்பை செய்து பார்க்கட்டும்.
தமிழ் மக்களை உதிரிகளாக;உதிரி வாக்காளர்களாக தொடர்ந்து பேணுவதில் எல்லா கட்சிகளுமே கவனம் செலுத்துகின்றன. குறிப்பாக தமிழரசு கட்சியும் அதைத்தான் செய்கின்றது.உதிரி வாக்காளர்களை காசுக்கு வாங்கலாம்; சலுகைகளுக்கு வாங்கலாம்; சாதியை சமயத்தை பிரதேச வாதத்தை தூண்டி வாங்கலாம்; தமிழ் தேசியத்துக்கு எதிரான எல்லாவற்றின் பெயராலும் வாங்கலாம்.ஆனால் உதிரி வாக்காளர்கள் ஆபத்தான தருணங்களில் அச்சுறுத்தலான சூழல்களில் பயந்து பார்வையாளர்களாக மாறிவிடுவார்கள். மாறாக திரளான வாக்காளர்கள்; திரளான ஆதரவாளர்களோ சிறைகளை நிரப்புவார்கள்.தமது தலைவருக்கு ஆபத்து என்றால் வெகுண்டெழுந்து அந்த இடத்தையே அமர்க்களப்படுத்தி விடுவார்கள்.அது தமிழரசியலில் கடந்த 14 ஆண்டுகளில் எங்கேயாவது எப்பொழுதாவது நடந்திருக்கின்றதா? இனியாவது கட்சிகள் சிந்திக்குமா? கட்சித் தலைவர்கள் சிந்திப்பார்களா?