சிதம்பர ரகசியமும்... ஆச்சரிய தகவல்களும்...
பல கோடிகள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன.
சிதம்பரம் நடராஜர் கோவில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோவிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சரியங்களின் சில தகவல்கள் .
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரமாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்கள் அதனிலடங்கும்.
அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான். சிதம்பரம் கோவில்அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப் பகுதி என்று கூறப்படுகின்றது.
பஞ்ச பூத கோவில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காளஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 டிகிரி 41 நிமிடம் கிழக்கு தீர்க்க ரேகையில்அமைந்துள்ளது.
இன்று கூகுள் வரைபடம் உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல், புவியியல் மற்றும் வானவியலின் உச்சகட்ட அதிசயம்.
மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோவிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிக்கின்றது. விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது.
இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.
இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும். திருமந்திரத்தில் " திருமூலர்" (மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே) என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிக்கின்றது.
"பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய 5 படிகளை ஏற வேண்டும், இந்த படிகள் "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது. அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற 5 எழுத்தே அது.
"கனகசபை" பிற கோவில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன. இது 4 வேதங்களை குறிக்கின்றது. பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன.
இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது.இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றது. பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.
அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது. சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.