நம் நகங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவது எப்படி?
நம்முடைய விரல்களுக்கு கவசமாகவும், விரலின் நுனிகளைப் பாதுகாப்பது நகங்கள் தான். இதனால் தான் நகங்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது என்கின்றனர் மருத்துவர்கள். நகங்களை வைத்து நீங்கள் எந்தளவிற்கு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்கள் என்பது உட்பட, உடலில் என்னென்ன ஊட்டச்சத்துக் குறைபாடுகள் உள்ளன என்பதையும் நாம் தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக நான்கு முதல் எட்டு மாதங்களில் ஒரு நகம் முழுவதுமாக வளர்ச்சியடைந்துவிடும். ஒரு மாதத்திற்கு கை விரலில் 3 மில்லி லிட்டரும், கால் விரலில் ஒரு மில்லி மீட்டரும் நகம் வளரும். ஆனாலும் கோடைக்காலத்தில் நகங்கள் வேகமாக வளரும் தன்மை கொண்டவை.
நகத்தின் வளர்ச்சி இயல்பாகவே இவ்வாறு இருந்தாலும், சில நேரங்களில் ஊட்டச்சத்து குறைபாடு, தொடர்ந்து நோய்வாய்ப்படுதல், சில வகையான மருந்துகளைத் தொடர்ச்சியாக சாப்பிடுதல், வயது முதிர்ச்சி போன்ற பல்வேறு குறைபாடுகளால் நகத்தின் வளர்ச்சி குறைவாக இருக்கும் அல்லது மிகவும் மெதுவாக வளரும். இதுப்போன்ற நேரத்தில் தான், நம்முடைய நகங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் எப்படி நகங்கள் ஆரோக்கியமற்றது என கண்டறிய வேண்டும் என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.
நகங்கள் பாதிப்படைந்துள்ளனவா என்பதைக் கண்டறிவது எப்படி?
பலவீனமான நகங்கள்: நகங்கள் எளதில் உடையக்கூடியதாகவே அல்லது பிளவுபடக்கூடியதாகவோ இருந்தால், அதற்கு அதிக பராமரிப்பு தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துக் குறிப்பாடு, தண்ணீரில் அதிக நேரம் இருக்கும் போது நகங்கள் வலுவிழந்து உடையக்கூடும். எனவே இதுப்போன்ற நேரங்களில் உங்களுடைய நகங்களை முறையாக பாதுகாக்க வேண்டும்.
நிறமாற்றம்: உங்களுடைய கை மற்றும் கால் நகங்கள் மஞ்சள் அல்லது கருப்பு உள்ளிட்ட நிறத்தில் மாறினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதை சரி செய்ய வேண்டும் என்றால் நீங்கள் அடிப்படை சுகாதாரத்தை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். உங்களுடைய நகங்கள் நிறம் மாறுவதற்கு பூஞ்சை தொற்று ஒரு காரணமாக அமையலாம்.
நகங்கள் உரிந்து வருவது: அதிக நேரம் தண்ணீரில் இருப்பது, மற்றும் நகங்களுக்கு அதிகப்படியான ரசாயனம் நிறைந்த நகப்பூச்சுகளைப் பயன்படுத்தும் போது அவை சேதமடைகிறது. குறிப்பாக நகங்கள் உரிந்து போவது அல்லது பிளவுபடும் என்பதால், நீங்கள் ரசாயனம் அதிகம் உள்ள நெயில் பாலிஷ்களை உபயோகிக்கக்கூடாது.
முகடுகள் அல்லது பள்ளங்கள்: நகங்களில் செங்குத்தான முகடுகள் அல்லது பள்ளங்கள் ஏற்படுவது, வயதாகிறது என்பதைக் குறிக்கும் ஒரு அறிகுறியாகும். இருப்பினும், பியூவின் கோடுகள் எனப்படும் ஹாரிசாண்டல் முகடுகள் அல்லது குழிகளை கவனித்தால், அது உடலில் ஏதோ பிரச்சினை இருக்கிறது அல்லது நகங்களுக்கு ஏற்படும் அதிர்ச்சியின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் இரும்புச்சத்து குறைபாடுகளினாலும் நகங்களில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருள்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதோடு சில நேரங்களில் நகங்களைச் சுற்றி சிறிய தோல் வளரும் போது, வலி மற்றும் வீக்கம் ஏற்படும். எனவே உங்களுக்கு நகங்களை வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், உங்கள் நக பராமரிப்பு வழக்கத்தை முறையாக பின்பற்ற வேண்டும்.இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கவனித்தால், உங்கள் நகங்களுக்கு கூடுதல் கவனிப்பைக் கொடுப்பது நல்லது.