முக்கிய பிரபலங்களின் புளூ டிக்கை நீக்கிய டுவிட்டர்!
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்னர் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். அதன்படி டுவிட்டர் கணக்குகளை சரிபார்க்கும் சேவைக்கு நிறுவனம் கட்டணம் நிர்ணயித்தது.
இதற்காக ஒரு பயனர் ஒரு மாதத்திற்கு 8 டாலர் கட்டணம், அதாவது இந்திய ரூபாயில் 650 செலுத்த வேண்டும் என்றும் அறிவித்தது. இதற்கு டுவிட்டர் வாடிக்கையாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் இந்த அறிவிப்பை வரவேற்றனர்.
டுவிட்டர் கணக்கு சரிபார்ப்புக்கு வரவேற்பு தெரிவித்த வாடிக்கையாளர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்தினர். ஆனால் பல வாடிக்கையாளர்கள் இந்த கட்டணத்தை செலுத்தாமல் இருந்தனர்.
இதையடுத்து கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் புளூ டிக் கணக்குகளை நீக்கி விடுவோம் என்று டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது. அதன் பின்பும் வாடிக்கையாளர்கள் இதற்கான கட்டணத்தை செலுத்தவில்லை.
இதையடுத்து டுவிட்டர் நிறுவனம் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் கணக்குகளில் புளூ டிக்கை நீக்க தொடங்கியது. உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் முதல் பில்கேட்ஸ் வரை பலரது கணக்குகளின் புளூ டிக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
இதுபோல தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, விஜய், விஜய் சேதுபதி உள்பட பலரது டுவிட்டர் புளூ டிக்குகள் நீக்கப்பட்டுள்ளது.