நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி விசேட உரை!
அரசாங்கத்தினுள் பாரியளவில் மறுசீரமைப்பினை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் விமானப்படை தளத்தில் இன்று (04) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார்.
"நமது நாடு எதிர்கொள்ளும் பெரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தேவையான முதல் படிகள் தொடங்கியுள்ளன."
"நாளை பல்கலைக்கழகத்தில் பொருளாதார விரிவுரையாளர்களை சந்திக்க எதிர்ப்பார்த்துள்ளேன்.
"நாடு பெரும் சிக்கலில் இருந்த நேரத்தில் நான் ஜனாதிபதியானேன். பாராளுமன்றத்தை கைப்பற்றும் நிலைக்கு நாடு வந்திருந்தது."
"இராணுவம், பொலிஸார் மற்றும் பிற பாதுகாப்புப் படையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு நான் இன்று நன்றி கூறுகிறேன். அந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், நாங்கள் இன்று இங்கு இருக்க மாட்டோம்."
"கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. வரிகள் அதிகரித்தன, பொருட்களின் விலைகள் அதிகரித்தன, வரி செலுத்த வேண்டியிருந்தது. வருமானம் மட்டுப்படுத்தப்பட்டது. பிரச்சனைகள் இல்லாதவர்கள் எவரும் இங்கு இல்லை. அந்த தீர்மானங்களை எடுத்ததால்தான், எங்களுக்கு IMF உதவி கிடைத்தது. எனவே, இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் சம்பளம் செலுத்த எம்மிடம் பணம் உள்ளது. ."
"இது முதல் சுற்று மட்டுமே. இனி வெளிநாட்டு வங்கிகளுடன் வியாபாரம் செய்யலாம். இனி நமக்கு கடன் தொடர்பில் 03 குழுக்களுடன் கலந்துரையாட வேண்டியுள்ளது. பரிஸ் கிளப், அதில் அங்கம் வகிக்காத சீனா போன்ற நாடுகளுடன், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி"
"அநேகமாக, சர்வதேச சந்தையில் இருந்து எடுக்கப்பட்ட டொலர் பத்திரங்களுக்கு நாங்கள் கடன்பட்டுள்ளோம் ... 50 சதவிகிதத்திற்கும் மேலாக."
"அதனையும் விரைவில் முடித்துவிடுவேன் என்று நம்புகிறேன். எவ்வளவு கடினமாக இருந்தாலும், சிறிது காலத்தில் நாம் இதிலிருந்து மீண்டு வருவோம்."
" நமது பிரதான இரண்டு பிரச்சினைகள்... செலவை விட வருமானம் குறைவு. அதற்காக ரூபாயில் கடன் வாங்கினோம். இறக்குமதியை விட ஏற்றுமதி வருமானம் குறைவு. அதற்காக டொலரில் கடன் வாங்கினோம். இதை மாற்ற பாடுபட வேண்டும்."
"அரசாங்கத்தினுள் பாரிய மறுசீரமைப்பினை மேற்கொள்ள வேண்டியுள்ளது. புதிய ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஆட்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இது முப்படைக்கும் மற்றும் பொலிஸுக்கும் பொருந்தும். 2028 க்குள் முப்படை வீரர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைக்கப்படும்.
"சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பொலிஸாரின் எண்ணிக்கையை கொஞ்சம் அதிகரிக்க வேண்டியுள்ளது. அரச சேவையில் அது இடம்பெறாது."