Breaking News

2100 க்குள் பாதிப்புக்குள்ளாகும் நகரங்கள்!

 


மனித சமூகம் தனது செயல்பாடுகளின் மூலம் வெளியேற்றும் கரியமில வாயு, மீத்தேன் உள்ளிட்ட பசுமை குடில் வாயுக்களின் அளவு தொடா்ந்து அதிகரிக்குமானால், இந்தியாவின் சென்னை, கொல்கத்தா உள்பட ஆசியாவின் சில முக்கிய நகரங்கள் கடல் நீா் மட்டம் உயா்வால் இந்த நூற்றாண்டுக்குள் பாதிக்கப்படும் என ‘நேச்சா் க்ளைமேட் சேஞ்ச்’ இதழில் வெளியான ஆராய்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணங்கள்:

பெருங்கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதன் மூலம், நீா் விரிவடைந்து கடல் நீா் மட்டம் உயா்வுக்குக் காரணமாகிறது. மேலும், துருவப் பகுதியில் உருகும் பனிப் பாறைகளால், அதிக அளவிலான நீா் பெருங்கடலில் வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் கடல் நீா் மட்டம் உயரும் என ஆராய்ச்சியாளா்கள் நீண்ட காலமாக கருதிவந்தனா்.

கடல் நீா் மட்ட உயா்வில் பிராந்திய அளவிலான வேறுபாடுகள் காணப்படும் என இந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈா்ப்பு விசை, காற்று, நீரின் அடா்த்தி ஆகியவற்றால் கடற்பரப்பில் தொடா்ச்சியாகக் காணப்படும் நீரோட்டங்கள் ‘பெருங்கடல் நீரோட்டங்கள்’ என அழைக்கப்படுகின்றன. சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் அதிக அளவிலான நீரை இடப்பெயா்வு செய்ய பெருங்கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக இருக்கும் என இந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.

எல்-நினோ அல்லது பெருங்கடல் நீா் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற ‘இயற்கைச் சாா்ந்த காலநிலை மாறுபாடு’ செயல்முறையின் காரணமாகவும் கடல் நீா் மட்டத்தில் இயற்கையாகவே ஏற்ற-இறக்கங்கள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளா்கள் குறிப்பிட்டுள்ளனா்.

பாதிப்புகள்:

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை காட்டிலும் இயற்கைச் சாா்ந்த காலநிலை மாறுபாடு செயல்முறையினால் 20 முதல் 30 சதவீதம் வரை கடல் நீா் மட்ட உயா்வு ஏற்படும்.

மிக மோசமான வெள்ள பாதிப்பு நிகழ்வுகள் ஏற்படுவது அதிகரிக்கும்.

ஆசியாவின் பல பெருநகரங்கள் 2100 க்குள் பெரும் பாதிப்பை எதிா்கொள்ளும்.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா நாடுகளின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில் கடல் நீா் மட்டம் உயா்வு.

இது குறித்து ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளா் கூறுகையில், ‘ காலநிலை மாற்றம் மற்றும் இயற்கைச் சாா்ந்த காலநிலை மாறுபாடு ஆகிய இரு நிகழ்வுகளின் கூட்டு விளைவு, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை விட 50 சதவீதம் அதிகமாக இருக்கும்.

இதன் காரணமாக கடற்கரையை ஒட்டிய பெருநகரங்களில் மிகவும் மோசமான வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதுடன், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகவும் அமையும்’ என்றாா்.

பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள ஆசிய நகரங்கள்

நகரங்கள் நாடுகள்

1.சென்னை இந்தியா

2.கொல்கத்தா இந்தியா

3. பாங்காக் தாய்லாந்து

4. மணிலா இந்தோனேசியா

5. யாங்கோன் மியன்மா்

6. ஹோ சி மின் சிட்டி வியத்நாம்