Breaking News

தேர்தல் குறித்து அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழு விடுத்துள்ள கோரிக்கை!

 இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதமின்றி சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழு தெரிவித்துள்ளது.

புளூம்பெர்க் இணையதளம் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளித்த அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் தலைவர் பாப் மெனெண்டஸ், தனது ட்விட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

நிதிப்பற்றாக்குறை காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 09 ஆம் திகதி நடத்த வேண்டாம் என தீர்மானித்துள்ளதாக புளூம்பெர்க் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பணத்தை அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு அமைச்சரவை தமக்கு அறிவித்துள்ளதாக திறைசேரியின் செயலாளர் நீதிமன்றில் தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்திக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் தலைவர் பாப் மெனெண்டஸ் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ´இலங்கை மக்களின் குரலை நசுக்கும் எந்தவொரு முயற்சியும் ஜனநாயகத்திற்கு எதிரானது மற்றும் இலங்கையர்களின் உரிமைகளை நேரடியாக மீறும் செயலாகும்´ என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதமின்றி சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழு தெரிவித்துள்ளது