சிகிச்சைக்கு பணமில்லை.. உதவி கோரும் பிதாமகன் பட தயாரிப்பாளர்..
தமிழ் சினிமாவில், என்னம்மா கண்ணு, பிதாமகன் ,லவ்லி, விவரமான ஆளு, லூட்டி, கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. எவர்கிரீன் மூவிஸ் என்ற பெயரில் தனி தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நிறைய படங்களை தயாரித்து இருக்கிறார்.
இவரது சில படங்கள் பெரும் நஷ்டத்தை அடைந்ததால் தான் சம்பாதித்த பணம், பொருட்களை இழந்து உள்ளார். இந்த நிலையில் தயாரிப்பாளர் வி.ஏ துரை தான் மிகுந்த சிரமத்தில் இருப்பதாகவும் யாராவது உதவினால் நன்றாக இருக்கும் என வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வி.ஏ.துரை அந்த வீடியோ பதிவில், நான் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அதனால் காலில் உள்ளே எலும்பு தெரியும் அளவிற்கு புண்கள் ஏற்பட்டு இருக்கிறது. கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும் நிலையில் உள்ளது. என்னை கவனித்துக் கொள்ள ஆளில்லாத பரிதாபமான நிலைமையில் இருக்கிறேன்.
மருந்து வாங்குவதற்கு கூட காசு இல்லாமல் தவித்து வருகிறேன். அதனால் யாராவது எனக்கு உதவி செய்யுங்கள் " என்று கூறினார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் என்னுடைய 40 ஆண்டு கால நண்பர் தன் நிலையை எடுத்துக்கூறி உதவுமாறும், திரைத்துறையினரும் தயாரிப்பாளர் சங்கமும் மருத்துவ உதவிகள் கிடைக்க தனக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவரின் இந்த சூழ்நிலையை அறிந்த சூர்யா வி.ஏ. துரையின் மருத்துவ செலவுக்காக ரூபாய் 2 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.