Breaking News

அஷ்டமி, நவமி திதிகளை மக்கள் ஏன் புறகணிக்கிறார்கள்!



அமாவாசை, மற்றும் பௌர்ணமி நாட்களுக்கு பிறகு வரும் 8வது நாள் அஷ்டமி, 9வது நாள் நவமி ஆகும். அஷ்டமி, நவமி வரும் திதிகளில் நல்ல காரியங்கள் செய்ய கூடாது, அல்லது தொடங்ககூடாது என்று கூறுவார்கள். அது ஏன் என்று பலருக்கும் தெரிவதில்லை. அஷ்டமி, நவமி திதிகள் ஆகாத நாட்கள் என சொல்லி வைத்துள்ளர்கள் முன்னோர்கள். அது எதற்கு என்று இந்த பதிவில் விஞ்ஞான ரீதியாகவும், புராண ரீதியாகவும் பார்க்கலாம்.

புராண ரீதியாக அஷ்டமி, நவமி

சிவபெருமான் திதிகளை படைத்து அவற்றிற்கு அவற்றின் வேலைகள் மற்றும் குணங்களை பற்றி விளக்கி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அஷ்டமி திதியும், நவமி திதியும் சிவபெருமான் சொல்வதை கவனிக்காமல் இருந்தனவாம். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் அவற்றிற்கு சாபம் கொடுத்தாராம். அதாவது மக்கள் உங்கள் திதி வரும் நாளில் எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள், எந்த விஷயத்தையும் தொடங்கமாடர்கள், உங்களை ஒதுக்கி வைப்பார்கள் என சாபம் கொடுத்தாராம்.

இதனால் கலக்கமுற்ற அஷ்டமி, நவமி திதிகள் சிவபெருமானிடம் தங்களை மன்னிக்குமாறு வேண்டின. ஆனால் சிவபெருமானோ கொடுத்த சாபம் கொடுத்ததுதான், வேண்டுமானால் மகாவிஷ்ணுவை போய் பாருங்கள் அவர் உங்கள் சாபம் தீர எதாவது செய்வார் என்றாராம். உடனே அவைகள் மஹாவிஷ்ணுவிடம் சென்று தாங்கள் சபிக்கப்பட்டதை சொல்லி அவரிடம் வருத்தப்பட்டன.

உடனே மகாவிஷ்ணு அவைகளிடம் “வருத்தப்படாதீர்கள். நான் உங்கள் திதிகளில் அவதாரம் செய்கின்றேன்” எனக் கூறி அவற்றை சமதானப்படுதினார். அவர் சொன்னபடியே நவமி திதியில் ராமர் அவதாரம் எடுத்தார். அதே போல அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதாரம் எடுத்தார். இதைதான் நாம் ஸ்ரீராமநவமி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம். இந்த அஷ்டமி, நவமி திதிகளை மட்டும்தான் மக்கள் கொண்டாடுகின்றனர்.

அஷ்டமி, நவமி திதிகளை மக்கள் புறக்கணிக்க காரணம்

கடவுள் அவதாரங்களான ராமர், கிருஷ்ணர் அவதாரங்கள் பூவுலக வாழ்வில் கஷ்டங்கள் பல பெற அவர்கள் அவதரித்த அஷ்டமி, நவமி திதிகள் தான் காரணம் என மக்கள் நம்ப தொடங்கினர். இதற்கு காரணம் கடவுள் அவதாரங்களையே இந்த திதிகள் பாடாய்படுத்திவிட்டது, நாமெல்லம் எம்மாத்திரம் என நினைக்க தொடங்கியதே. இதனால் தான் இன்று வரை அஷ்டமி, நவமி திதிகளில் எந்த நல்ல காரியங்களும் செய்வதும் இல்லை, தொடங்குவதும் இல்லை.

விஞ்ஞான ரீதியாக அஷ்டமி, நவமி

நம் முன்னோர்கள் எதை சொன்னாலும் அதில் ஒரு காரணம் இல்லாமல் இல்லை. அஷ்டமி நவமி திதி வரும் நாட்களை ஏன் தவிர்க்க சொன்னார்கள் என்பதை விஞ்ஞான ரீதியாக விரிவாக பார்க்கலாம்.

பூமி தன்னைத்தானே சுற்றி வருவதற்கு ஒரு நாள் ஆகிறது. அதே பூமியானது சூரியனை சுற்றி வருவதற்கு ஒரு வருடம் ஆகிறது. நிலவு தன்னைத்தானே சுற்றிக் கொண்டு பூமியை சுற்றி வருவதற்கு ஒரு மாதம் (30 நாட்கள்) ஆகும். அப்படிபட்ட நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி வரும்போது ஒரு பாதி சுற்றை (15 நாட்கள்) அமாவாசை என்றும், அடுத்த பாதி சுற்றை (15 நாட்கள்) பௌர்ணமி என்றும் கூறுகிறோம்.

அமாவாசை, மற்றும் பௌர்ணமிக்கு இடைப்பட்ட நாளான 8வது நாள் அஷ்டமி என்றும், 9வது நாள் நவமி என்றும் சொல்கிறோம். இதன்படி ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமிகளும், இரண்டு நவமிகளும் வரும். இதை தேய்பிறை அஷ்டமி, நவமி என்றும் வளர்பிறை அஷ்டமி, நவமி என்றும் சொல்கிறோம்.

அஷ்டமி தினம் வரும் நாளன்று (8வது நாள்) நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவே வருகிறது. அந்நேரத்தில் சூரியனின் சக்தியும் , சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் பூமியில் ஒருவித அதிர்வலைகள் ஏற்படுகிறது. அந்த அதிர்வலைகள் பூமியில் உள்ள அனைத்து உயிர்களிடமும் எதிரொலிக்கும். அந்த நேரத்தில் எந்த உயிராலும் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியாது. அந்நேரத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் நிலையில்லாமல் இருக்கும்.

நவமி தினம் (9வது நாள்) முடிந்த பிறகே சந்திரன் பூமியை விட்டு விலகி தன் இயக்கத்தை தொடரும், பூமியும் தனது இயல்பு நிலைக்கு படிப்படியாக திரும்பும். அப்போது தான் மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்களின் மனமும் ஒரு நிலைக்கு வரும். அதனால் தான் அஷ்டமி தினம் அன்றும், நவமி தினம் அன்றும் எந்த முக்கியமான முடிவையும் எடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். இதனால் தான அஷ்டமி மற்றும் நவமி திதிகள் சுபகாரியங்களுக்கு ஏற்றது இல்லை என முன்னோர்கள் சொன்னார்கள்.