Breaking News

ஜனாதிபதி மக்களின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருகிறார் - சஜித் !

 


நாட்டு மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை அரசாங்கம் மீறி நாட்டின் பக்கச்சார்பற்ற நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளையும், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகளையும் அரசியல் சதித்திட்டங்களினூடாக அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தி மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


தேர்தல் ஆணைக்குழுவிற்கும், நாட்டின் உயர் நீதிமன்றத்திற்கும், நிதி அமைச்சுக்கும் மற்றும் அரச அச்சகத்திற்கும் கூட இடையூறுகளை ஏற்படுத்தி தேர்தலை சீர்குலைக்கும் செயலிலும் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு ஆதரவு தெரிவித்து துணைபோகும் விதமாக தேர்தலை சீர்குலைக்கும் ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித தலைவர் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் முறைமை மாற்றமொன்று வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தாலும், தற்போது முறைமை மாற்றம் ஒன்று நிகழாது ராஜபக்சர்களை பாதுகாக்கும் திட்டமொன்றே இயங்கி வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிக்கப்பட்ட வீடுகளுக்கு நட்டஈடு வழங்குதல், மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் மற்றும் முழு பதவிக் காலம் முடியும் வரை பொதுத் தேர்தலுக்கு செல்லாதிருத்தல் என்ற காரணங்களுக்காக மாத்திரமே இந்த ஜனாதிபதி செயற்பட்டுக்கொண்டிருக்கிறார் எனவும் அவர் தெரிவித்தார்.

பொரளை குப்பியாவத்த பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.