அரசாங்கத்தின் கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடம் விடுத்துள்ள கோரிக்கை!
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தை வழங்குமாறு எதிர்க்கட்சிகள் நேற்று முன்தினம் (28) சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கை தொடர்பில், அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய சபாநாயகரை செயற்படுமாறு அரசாங்கத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர்.
ஆளும் கட்சியின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் நேற்று (1) பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்த போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இதனை வலியுறுத்தினார்.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தை உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் நேற்று முன்தினம் (28) சபாநாயகரை சந்தித்து கோரிக்கை விடுத்தன.
அத்துடன், நிதியமைச்சின் செயலாளரை பாராளுமன்றத்திற்கு அழைத்து இவ்விடயம் தொடர்பில் விசாரிக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கு பதிலளித்த சபாநாயகர், இவ்விடயம் தொடர்பில் ஆளும் கட்சியின் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று (01) பிற்பகல் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலுக்காக பிரதமர் தினேஷ் குணவர்தன, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர, காஞ்சன விஜேசேகர, டிரான் அலஸ், நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, வஜிர அபேவர்தன, எஸ்.எம்.எம்.முஷாரப், அலி சப்ரி ரஹீம், ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், சி.பி.ரத்நாயக்க, காமினி லொகுகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிதி அமைச்சின் செயலாளரை பாராளுமன்றத்திற்கு அழைக்கும் அதிகாரம் தமக்கு இல்லை எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு கோருவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு அதிகாரம் இல்லை என சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
மேலும் உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, சட்டமன்றம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று அடிபணியாத நிறுவனங்கள் என வலியுறுத்தினார்.
அச்சுறுத்தல் காரணமாகவே நிதிக் குழுத் தலைவர் பதவி விலகுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய கட்சித் தலைவர்கள், இது பாராளுமன்ற உறுபினர்களின் சிறப்புரிமையை மீறும் செயல் என்பதால் இது குறித்து ஆராய்வதற்கு தெரிவுக்குழுவை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த எதிர்க்கட்சியினரிடம் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை மீள அமுல்படுத்துமாறு கோருவது நகைப்புக்குரியது என குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:
கேள்வி - 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு பயன்படுத்துமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பதில்- நாங்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம். எதிர்க்கட்சியில் இருந்த அனைவரும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். அதாவது திறைசேரியில் இருந்து வரவு செலவுத் திட்டத்திற்குப் பணம் ஒதுக்குவதை எதிர்க்கிறார்கள். வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தீர்கள் என்றால் தேர்தலுக்குப் பணம் கொடுங்கள் என்று ஏன் கூச்சல் போடுகிறீர்கள்? அவ்வாறு செய்ய உரிமை இல்லை.
கேள்வி - இது தொடர்பில் பேசுவதற்கு நிதி அமைச்சின் செயலாளரை அழைக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பதில்- நிதி அமைச்சின் செயலாளர் எதற்காக அழைக்கப்படுகிறார்? மேலும் தேர்தலுக்குப் பணம் செலவழிக்க மாட்டோம் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த நாடு தேர்தல் நடத்தும் நிலையில் உள்ளதா? இப்போது மக்களுக்கு தேவை வாக்குகளா அல்லது சலுகைகளா? தேர்தல் நடத்தப்பட்டு 8711 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு மீண்டும் பணம் வழங்க வேண்டுமா? இந்த நேரத்தில் பதவி ஆசையில் தேர்தல் கேட்கிறார்கள். மக்கள் தெளிவாக உள்ளார்கள். இந்த நேரத்தில் தேர்தல் நடாத்தி மெஜிக் காட்ட முடியாது. யாராவது எதிர்க்கட்சித் தலைவருக்கு டொலர் கொடுத்து நாட்டைக் காப்பாற்றுவார்களா? இந்த தேர்தலில் ஆட்சியை மாற்ற முடியாது. வீதியில் இறங்கி நடனமாடுவது என்ன நகைச்சுவை? கடந்த இரண்டு மாதங்களில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டுக்கு வந்துள்ளனர். இப்படி வீதியில் இறங்கி போராடும்போது மக்கள் நாட்டுக்கு வருவார்களா? கிடைத்ததை அழிக்கும் வேலையை இவர்கள் செய்கிறார்கள்.