அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல்- பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு!
அமெரிக்கா தற்போது வரலாறு காணாத அளவுக்கு மோசமான வானிலையை சந்தித்து வருகிறது. அங்கு பெரும்பாலான மாகாணங்கள் பனிப்புயல் பாதிப்பை எதிர்கொள்கின்றன. கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் பனிப்புயல் வீசியது.
இதில் பல வீடுகள் மற்றும் அலுவலகங்களின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது. இந்த பனிப்புயல் காரணமாக சான் பிரான்சிஸ்கோவின் வீதிகளில் காணும் இடமெங்கும் பனியால் மூடப்பட்டு இருந்தது. அங்கு சாலைகளில் நிறுத்தியிருந்த கார்கள் மறையும் அளவுக்கு பனி படர்ந்திருந்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும், மிசிசிபி மாகாணத்தில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என அமெரிக்காவின் வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் மிசிசிபி மாகாணத்தில் புயலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. ஏராளமான மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
எனவே பல நகரங்கள் இருளில் மூழ்கியது. மேலும் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து தயாராக இருந்த மீட்பு குழுவினர் விரைந்து செயல்பட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கி இருந்த பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த பயங்கர புயலால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் மாயமானதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.