மன அழுத்தத்தின் முக்கிய அறிகுறிகள்!
இந்தியாவில் நான்கில் ஒரு பெண், பத்தில் ஒரு ஆண் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார். இந்தியாவில் 12 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியர்களில் மன அழுத்தத்துக்கான முதல் அறிகுறி வெளிப்படும் சராசரி வயது 31.9. வளர்ந்த நாடுகளில் இது இன்னும் குறைவான வயதாக இருந்தாலும், இந்தியாவில் இந்த சராசரி வயது தற்போது குறைந்து வருவது கவலையளிக்கிறது.
பதின்பருவ வயதினரில் மன அழுத்த அறிகுறிகளை கொண்டிருப்பவர்களில் 45 சதவீதத்தினர் மது அல்லது போதைப்பொருளை நாடுகின்றனர்.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 67 சதவீதத்தினர் தற்கொலை மனப்பான்மையை கொண்டிருக்கின்றனர். 17 சதவீதத்தினர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள்.
எதைப் பார்த்தாலும் எதிர்மறை மனோபாவத்தை வெளிப்படுத்துவது, சோக உணர்வில் மூழ்கிக் கிடப்பது, எப்போதும் அதிக எரிச்சலுடன் இருப்பது, எல்லாவற்றின் மீதும் திடீர் ஆர்வக்குறைவு, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நடத்தை, குழு, கூட்டமாக இருக்கும்போதும்கூட தனித்திருப்பதாக உணர்வது.
மன அழுத்தத்தால் மூளைக்குள் என்னதான் நடக்கிறது? மூளை பின்மேடு பகுதிதான் உணர்ச்சிகள், மனநிலை, நினைவு போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. மன அழுத்த நோயாளிகளிடம் இந்தப் பகுதியின் அளவு சுருங்கியிருக்கிறது.
நார்எபிநெப்ரின் என்பது நரம்பு கடத்தி ஹார்மோன். இது அதிகமாக இருந்தால் சீஸோபிரெனியா (மனச்சிதைவு), குறைவாக இருந்தால் மன அழுத்தம் ஏற்படும். செரடோனின் என்ற ஹார்மோன் குறைவாக இருந்தால் மன அழுத்தம், மனக்கலக்கக் கோளாறுகள் ஏற்படலாம்.
மூளையின் முன்பகுதியில் உள்ள பெருமூளை, திட்டமிடுதல், முடிவெடுத்தல் போன்றவற்றில் பங்களிக்கிறது. மன அழுத்தம் கொண்டவர்களிடம் இது இயல்புக்கு மாறாக சோர்வடைந்து விடுகிறது.
முன்தலை பெருமூளையின் வலது பாதி, எதிர்மறை உணர்ச்சியை உருவாக்க காரணமாக இருக்கிறது. மன அழுத்தம் கொண்டவர்களிடம் மிகவும் பலவீனமாக இருக்கிறது.