Breaking News

இன்று முதல் தடையில்லா மின்சாரம்!

 


இன்று (16) முதல் புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் அமுலாகும் நிலையில் நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், மக்களுக்கு தொடர்ந்து மின்சாரத்தை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக குறிப்பிட்டார்.

மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காக 22 பில்லியன் ரூபா மேலதிக கடனாக வழங்குவதற்கு இலங்கை வங்கி இணக்கம் தெரிவித்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

“ஜனவரியில் நாங்கள் முன்வைத்த யோசனையை ஜனவரியில் அமுல்படுத்தியிருந்தால் அது எமக்கு இன்னும் இலகுவாக இருந்திருக்கும். எவ்வாறாயினும், தாமதமாக இருந்தாலும் இன்று முதல் தடையில்லா மின்சாரத்தை வழங்க முடியும் என நினைக்கிறேன். 

மேலும், இன்று முதல் நிலக்கரி, எரிபொருள் மற்றும் நெப்தா இறக்குமதி செய்வதற்கு தேவையான வசதிகள் வங்கிகள் ஊடாக கிடைக்கப்பெறவுள்ளன. பலர் தவறான கருத்தை பரப்ப முயன்றனர். மின்சார சபையின் பழைய இழப்பை ஈடுகட்ட இந்தக் கட்டணங்கள் திருத்தப்படுகின்றன என கூறினர்.

 அது நடக்கவே நடக்காது. ஏனெனில் மின்சார சபையின் நஷ்டத்தை ஈடுகட்ட இந்த கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. இன்று முதல் மின் உற்பத்திக்கான செலவை ஈடுகட்ட மட்டுமே இந்த புதிய அறவீட்டு முறை முன்மொழியப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் ஒரு கட்டத்தை இந்த மின்கட்டண அதிகரிப்பு ஊடாக வெற்றிகரமான நிறைவேற்றியுள்ளோம். 

ஜனவரி 1 ஆம் திகதி முதல், சர்வதேச நாணய நிதியத்தின் வசதிகளைப் பெறுவதென்றால், எங்களின் எந்தவொரு அரசாங்க நிறுவனத்திற்கும் கூடுதல் பணத்தை முதலீடு செய்யவோ அல்லது கொடுக்கவோ முடியாது என்று இணங்கியுள்ளோம். அதன்படி, திறைசேரியில் இருந்து மின்சார சபைக்கு பணம் வழங்கப்பட மாட்டாது. இனி வரும் காலங்களில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது. 

மேலும் எதிர்வரும் ஜூலை மாதம் மின்கட்டணத்தை குறைக்க எதிர்ப்பார்த்துள்ளோம். தடையில்லா மின்சார விநியோகம் தொடர்பில் மாத்திரமன்றி மற்றுமொரு ஆலோசனையை ஜனாதிபதி வழங்கினார். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை இலக்காகக் கொண்டு பொருத்தமான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறும் கூறினார். அதன்படி, எதிர்காலத்தில் குறைந்த வருமானம் கொண்ட மற்றும் குறைந்தளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் மக்களுக்காக நிதியமைச்சகமும், எமது அமைச்சும் இணைந்து ஒரு திட்டத்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளோம். 

அதை விரைவாக செய்ய முடியாது. எங்களுக்கு சிறிது காலம் எடுக்கும். மேலும், அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களை இலக்காகக் கொண்டு 100 மில்லியன் டொலர் இந்திய கடனுதவி முறையின் கீழ் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். அடுத்த 3 மாதங்களில் அதை அமல்படுத்துவோம்” என்றார்.