“இருள்சூழ்ந்த சுதந்திரம்” என பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் போராட்டம்
“இருள்சூழ்ந்த சுதந்திரம்” என பிரகடனப்படுத்தி தமிழரசுக்கட்சியால் மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுத்திருந்தது.
இன்று (சனிக்கிழமை) இலங்கை தமிழரசுக்கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் ஆரம்பமாகியிருந்தது.
அதன் பின்னர் மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் ஊடாக ஊர்வலம் இடம்பெற்றதுடன் பாலத்தின் இரு மருங்கிலும் சங்கிலி வடிவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அதனை தொடர்ந்து ஊர்வலம் கல்லடி பாலத்தின் அருகில் உள்ள மைதானம் வரையில் போராட்டம் சென்றது.
ஊர்வலத்தினை தொடர்ந்து கல்லடி பாலத்தில் உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டம் இடம்பெற்றிருந்ததுடன் அங்கு இறுதி யுத்ததின்போது வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலைமைகள் குறித்து வீதி நாடகமும் நடாத்தப்பட்டது.
குறித்த போராட்டத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள்,பிரதேசசபை தவிசாளர்கள்,உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.