Breaking News

நிலநடுக்க பலி எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியது!

 


துருக்கி, சிரியாவில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், இரு நாடுகளிலும் பெரும் சோக சுவடுகளை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. 

கட்டிட இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையே இடிபாடுகளில் இருந்து பலர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்தநிலையில் நிலநடுக்கத்தால் துருக்கியில் ஒரு கிராமமே முற்றிலும் அழிந்துள்ளது. 

அந்நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல நகரங்கள், கிராமங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து உள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலட் கிராமம் முற்றிலும் உருக்குலைந்துவிட்டது. 

அங்கு அனைத்து வீடுகளும் இடிந்து தரை மட்டமாகிவிட்டன. இடிந்து விழுந்த வீடுகளில் இருந்து குளிர்சாதன பெட்டி, வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் மீட்டு வருகிறார்கள். இதே போல் பல கிராமங்களில் வீடுகளை இழந்து மக்கள் தவித்து வருகிறார்கள்.

 இதற்கிடையே நிலநடுக்க மீட்புப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கட்டிட இடிபாடுகளில் யாராவது உயிருடன் இருக்கிறார்களா? என்று மோப்ப நாய் மற்றும் கேமராக்கள் மூலம் தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. மேலும் சில இடங்களில் கட்டிட இடிபாடுகளில் இருந்து யாராவது உதவி குரல் எழுப்புகிறார்களா என்று சோதனை செய்யப் டுகிறது. 

அப்படி குரல் ஏதாவது கேட்டால் இடிபாடுகளை அகற்றுகிறார்கள். கஹ்ரமன்மரஸ் மாகாணத்தில் 183 மணி நேரத்துக்கு பிறகு 10 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். அதே போல் ஹடாய் மகாணாத்தில் 182 மணி நேரத்துக்கு பிறகு 13 வயது சிறுமி மீட்கப்பட்டாள் என்பது குறிப்பிடத்தக்கது.