Breaking News

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே போட்டி?

 


அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால் இப்போதில் இருந்தே அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயக காட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். 

அதேபோல் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவர் தேர்தலில் போட்டியிடுவதை முறைப்படி அறிவித்து, தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார். 

இந்த நிலையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த பெண் அரசியல்வாதியும், இந்திய வம்சாவளியுமான நிக்கி ஹாலே போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருகிற 15-ந் தேதி அவர் தனது முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 நிக்கி ஹாலே ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது உறுதியானால் குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் டிரம்புக்கு எதிரான முதல் போட்டியாளராக அவர் இருப்பார். தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னராக 2 முறை பதவி வகித்தவரும், ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதருமான 51 வயதான நிக்கி ஹாலே, கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். 

அதோடு டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு எதிராக களம் இறங்க மாட்டேன் எனவும் நிக்கி ஹாலே கூறிவந்தார். ஆனால் சமீப காலமாக அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தனது சமீபத்திய பேட்டிகளில், "இது ஒரு புதிய தலைமுறைக்கான நேரம். நாட்டை ஒரு புதிய தலைவர் ஆள வேண்டும்" என பேசி வருவது குறிப்பிடத்தக்கது.