ஈரானில் சிறுமிகள் பள்ளிக்கு செல்வதை தடுக்க விஷம் வைத்து கொல்ல முயற்சி- மந்திரி தகவலால் அதிர்ச்சி!
ஈரான் நாட்டில் சிறுமிகள் பள்ளிக்கு செல்வதை தடுப்பதற்காக மர்மநபர்கள் விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்துள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை துணை அமைச்சர் யூனுஸ் பனாஹி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- தலைநகர் டெஹ்ரான் அருகே கோம் என்ற நகரம் உள்ளது. பழமை வாய்ந்த நகரமான இந்நகரம் மதகுருமார்களின் தாயகமாகும். இந்நகரில் சிறுமிகள் பள்ளிக்கு செல்வதை மர்ம நபர்கள் சிலர் விரும்பவில்லை.
இதனை தடுக்கும் நோக்கத்தில் விஷம் வைத்துள்ளனர். பெண்கள் பயிலும் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என சிலர் விரும்புவது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
கடந்த ஆண்டு நவம்பர் பிற்பகுதியில் இருந்து 100க்கணக்கான பள்ளி மாணவிகளிடையே சுவாச நச்சு வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட சில சிறுமிகளுக்கு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
விஷம் வைக்கப்பட்ட சம்பவம் வேண்டும் என்றே செய்யப்பட்டவை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அரசு செய்தி தொடர்பாளர் அலி பஹதோரி ஜஹ்ரோமி, உளவுத்துறை மற்றும் கல்வி அமைச்சகங்கள் விஷத்தன்மைக்கான காரணத்தை கண்டறிய முயற்சி செய்து வருவதாக கூறினார்.