தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி குறித்த அறிவிப்பு வெளியானது!
உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய, 05ஆம் திகதி முதல் 23ஆம் திகதி நள்ளிரவு வரை தகுதியான வாக்காளர்களிடமிருந்து தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை எதிர்வரும் 20ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் அறிவித்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிவித்தலில் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படும் திகதி, இடம், கட்டுப்பணத் தொகை, வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.
341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு கோரல் அறிவித்தலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.