பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை படை தாக்குதல்- பலி எண்ணிக்கை 83 ஆக உயர்வு!
பாகிஸ்தானின் பெஷாவரில் உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில் நேற்று மதியம் போலீசார், ராணுவ வீரர்கள் உள்பட 400க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது.
மேலும் குண்டுகள் வெடித்ததில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பலர் உடல் சிதறி பலியானார்கள். இந்த தாக்குதலில் 46 பேர் பலியானதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே காயமடைந்த ஏராளமானோர்
பெஷாவரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் இறந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளதாகவும், 150-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.