Breaking News

2023: எதற்காக காத்திருக்கிறது? நிலாந்தன்!

 


புதியவருடம் பொருளாதார ரீதியாக சுப செய்திகளோடு பிறக்கவில்லை.பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவி எதிர்பார்க்கப்பட்டது போல ஆண்டின் இறுதிக்குள் கிடைக்கவில்லை.அந்த உதவியை பெறுவதாக இருந்தால் இந்தியா சீனா போன்ற நாடுகளிடம் வாங்கிய கடனை மீளக் கட்டமைக்க வேண்டும்.அவ்வாறு மீளக் கட்டமைப்பதில் நெருக்கடிகள் தோன்றியிருப்பதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இது விடயத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இலங்கை இறுகிப்போய் நிற்பதாக அவர் தெரிவித்து இருந்தார்அது காரணமாக ஐ.எம்.எப் நிதி மேலும் தாமதமாகலாம்.

அது ஒரு பெரிய உதவி அல்ல.மொத்தம் 2.8 பில்லியன்தான். ஆனால் இலங்கைத் தீவின் மொத்த கடன் 57 பில்லியன்.எனவே ஐ.எம்.எஃப் நிதியானது யானைப் பசிக்கு சோளப் பொரியைப் போன்றது.ஆனால் அந்த நிதி உதவிக்குள்ள முக்கியத்துவம் என்னவென்றால், அந்த நிதி உதவி இலங்கைக்கு கிடைத்தால் அது ஏனைய நாடுகளிடமிருந்து இலங்கைத்தீவு நிதி உதவியை பெறுவதற்கு தேவையான தகுதியை அந்தஸ்தை அதிகப்படுத்தும்.இந்த அடிப்படையில் சிந்தித்தால்,புதிய ஆண்டு பிறந்த போது நாடு கடன் கொடுத்த நாடுகளுக்கு இடையே இறுகிப்போய் நிற்கிறது என்பதுதான் உண்மை.

எனினும் தலைநகர் கொழும்பிலும் ஏனைய பெருநகரங்களிலும் கிறிஸ்மஸ்சும் புத்தாண்டும் களைகட்டியிருப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது. நகரங்களின் கடைத்தெருக்களில் மக்களை நெரிசலாக காணப்படுகிறார்கள்.ஆனால் அவர்களிடம் நுகர்வு சக்தி குறைந்துவிட்டது.பாடசாலைக்கு வரும் பிள்ளைகளில் ஒரு தொகுதியினர் சாப்பிடாமலே வருகிறார்கள்.குறிப்பாக புறநகரப் பகுதிகளிலும் உட் கிராமங்களிலும் காணப்படும் பாடசாலைகளில் பிள்ளைகள் அதிகளவில் சாப்பிடாமல் வருகிறார்கள் என்று அதிபர்கள் கூறுகிறார்கள்.

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் பசியை போக்குவதற்காக உருவாக்கப்பட்ட சமூக சமையலறை திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. அது ஒரு அற்புதமான வேலை.பல்கலைக்கழகத்தின் சில விரிவுரையாளர்கள் முன்னின்று தொடங்கிய அந்த முயற்சி மாணவர்களுக்கு பேருதவியாக காணப்படுகிறது.அதேசமயம் அவ்வாறு மாணவர்களுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டிய ஒரு நிலைமை தொடர்ந்தும் காணப்படுகிறது என்பதே இப்போதுள்ள நாட்டின் பொருளாதார நிலைமையாகும்.புதிய ஆண்டு பிறந்த போது நாட்டின் பொருளாதார நிலைமை அதுதான்.

எனினும் அரசியல் பரப்பில் ஒரு சுப செய்தியை அறிவிப்பது போல அரசாங்கம் தமிழ் தரப்புடனான பேச்சுவார்த்தைகளை வேகப்படுத்தியுள்ளது.வரும் 5ஆம் திகதியளவில் அது தொடர்பில் தமிழ்க் கட்சிகளோடு ஜனாதிபதி உரையாட இருக்கிறார்.அதன்பின் 10ஆம் திகதியிலிருந்து தொடங்கி தொடர்ச்சியாக மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.தமிழ் ஊடகங்கள் அதனை மரதன் ஓட்டப் போட்டியோடு ஒப்பிடுகின்றன.அப்படி ஒரு மரதன் ஓட்டத்தை ஓடிக் காட்டினால்தான் பன்னாட்டு நாணய நிதியமும் வெளிநாடுகளும் உதவ முன் வரும் என்று அரசாங்கத்துக்கு தெரிகிறது.அதாவது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான உதவிகளைப் பெறுவது என்று சொன்னால் இனப்பிரச்சினையை அரசாங்கம் தீர்க்கத் தயார் என்ற செய்தியை கவர்ச்சியான விதத்தில் வெளியே கொண்டு வர வேண்டும். தமிழ்த் தரப்பின் பங்களிப்பின்றி அப்படி ஒரு தோற்றத்தை கட்டி எழுப்ப முடியாது.

ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரை அவர் கட்சி இல்லாத ஒரு ஜனாதிபதி. அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குள் கட்சியை மீளக் கட்டியெழுப்ப அவரால் முடியுமா என்பது சந்தேகமே. மீண்டும் ஒரு தடவை தாமரை மொட்டுக்களின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவேண்டி வரலாம் என்று அவருக்கு தெரிகிறது. தாமரை மொட்டு கட்சிக்கும் அது தெரியும்.தென்னிலங்கையில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிகளால் இழந்த கௌரவத்தை மீட்பதற்கு அவர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க என்ற ஒற்றை யானை தேவை.ரணிலை முன்னிறுத்தி உலக அளவில் தமது அந்தஸ்தை சரிசெய்து கொண்டு அடுத்தடுத்த கட்டங்களுக்கு போகலாமா என்று ராஜபக்சக்கள் சிந்திக்கிறார்கள்.

குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி ஆக்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் கட்சியையும் குடும்பத்தின் பெயரையும் பாதுகாத்துக் கொள்வதற்கு ரணில் தேவை என்று கருதுவதாக தெரிகிறது.உலகிலேயே அதிகம் தலைவர்கள்,தலைவிகளைக் கொண்ட குடும்பங்களில் ஒன்றாக ராஜபக்ச குடும்பம் பார்க்கப்பட்டது.ஆனால் அதே குடும்பம் இப்பொழுது கட்சியில்லாத ஒரு தலைவரின் தயவில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பது வரலாற்றின் முரண்நகைகளில் ஒன்று.

மஹிந்த ராஜபக்ச எதைக் கருதி இலங்கைத் தீவை ஆசியாவின் அதிசயம் என்று கூறினாரோ தெரியவில்லை. ஆனால் கடந்த ஆண்டு முழுவதும் இலங்கைத் தீவு எதிர்மறை அர்த்தத்தில் ஆசியாவின் அதிசயமாகத்தான் காணப்பட்டது. பிறந்திருக்கும் புதிய ஆண்டிலும் அது ஆசியாவின் அதிசயமா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு ரணில் கையில் இருக்கிறது. அவர் நினைத்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வில் ரிஸ்க் எடுக்கலாம்.இது அவருடைய கடைசி ஆட்டம். இனப்பிரச்சினையை விசுவாசமாக தீர்ப்பது என்று அவர் துணிச்சலாக தீர்க்கதரிசனமாக முடிவெடுப்பாராக இருந்தால் நிச்சயமாக இச்சிறிய தீவை ஆசியாவின் அதிசயமாக மாற்றலாம்.

குறைந்தபட்சம் அவருடைய மனைவியின் நண்பர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதையாவது அவர் செவிமடுக்கலாம்.தமிழ்ப்பரப்பில் உள்ள புத்திஜீவிகள்,பெண்ணிய செயற்பாட்டாளர்களோடு அவருடைய மனைவி மைத்திரி நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தார். ஆனால் கணவர் ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பாக அவர் அரகலயவை இரும்புக்கரம் கொண்டு நசுக்கத் தொடங்கியதும் திருமதி ரணிலுக்கு நெருக்கமாக இருந்த பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் பலர் அவருடன் தொடர்புகொள்வதைக் குறைத்து விட்டதாக கூறப்படுகிறது.தனது நண்பிகளுடனான உறவை வரையறைக்கு உட்படுத்திக்கொண்டு தனது கணவரின் அரசியல் நிலைப்பாடுகளை மௌனமாக அங்கீகரிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் திருமதி ரணிலுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தனது மனைவியின் தர்மசங்கடமான நிலையை விளங்கிக்கொள்ளத் தேவையான முதிர்ச்சியும் அறிவும் ரனிலுக்கு உண்டு.அதுமட்டுமல்ல இனப் பிரச்சினையை தீர்ப்பதில் தான் ரிஸ்க் எடுக்க வேண்டியிருப்பதையும் அவரால் விளங்கிக்கொள்ள முடியும். ஆனால் அவர் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பின் கைதி. அதைத் தாண்டி சிந்திக்க அவரால் முடியாது. தமிழ்க் கட்சிகள் கேட்பதை போன்று ஒரு சமஸ்டியை தருவதற்கு அவரால் முடியாது. அதற்கு வேண்டிய துணிச்சலும் புரட்சிகரமான வாழ்க்கை ஒழுக்கமும் அவருக்கு இல்லை. குறைந்தபட்சம் தன் வீட்டு குசினிக்குள்ளேயே தன் மனைவியின் தர்மசங்கடமான நிலைமையை அவரால் தீர்க்க முடியவில்லை.இந்த லட்சணத்தில் இனப்பிரச்சினையை தீர்ப்பது என்று சொன்னால் அதுவும் ஒற்றையாட்சி கட்டமைப்பை உடைத்துக் கொண்டு வெளியே வருவது என்று சொன்னால் அது முடியாது.அவரிடம் இருக்கக்கூடிய எந்த ஒரு தீர்வும் 13 ஆவது திருத்தத்தை தாண்டி செல்லாது என்று தெரிகிறது.

13ஆவது திருத்தத்தை இறுகக் கட்டிப்பிடித்தால் அதில் அவருக்கு பல நன்மைகள் உண்டு.முதலாவதாக,இந்தியாவின் ஆதரவு கிடைக்கும். இரண்டாவதாக, மகிந்தவும் ஆதரிப்பார்.மூன்றாவதாக, சஜித்தும் ஆதரிப்பார். நாலாவதாக, தமிழ்க் கட்சிகள் இணைந்து முன்வைத்த மூன்று கோரிக்கைகளில் அதுவும் ஒன்று.

இந்த நன்மைகளில் முதலாவது இந்தியாவை திருப்திப் படுத்தலாம் என்பது.அது அரசாங்கத்தைப் பொறுத்தவரையிலும் முக்கியமானது. ஏனென்றால் கடனை மீளக்கட்டமைப்பதற்கும் இந்தியாவின் உதவிவேண்டும். கடந்த சில வாரங்களாக அரசாங்கம் இந்தியாவை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளின் உச்சகட்டமாக அடுத்த சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியை யாழ்ப்பாணத்திலும் ஒழுங்குபடுத்த இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. இந்திய அரசாங்கத்தின் பிரதானிகளில் ஒருவரை- ஒன்றில் ஜனாதிபதியை அல்லது வெளியுறவு அமைச்சரை அந்நிகழ்வின் பிரதான விருந்தினராக அழைத்து யாழ் கலாச்சார நிலையத்தை அவருடைய கையால் திறந்து வைக்க அரசாங்கம் திட்டமிடுவதாக தெரிகிறது.

அவ்வாறு இந்தியாவை நெருங்கிச் செல்வதன் மூலம் ரணில் ஒரே கல்லில் பல மாங்காய்களை விழுத்த திட்டமிடுகிறார்.முதலாவது மாங்காய்,கடன் மறுசீரமைப்பில் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் தடங்கலை நீக்குவது.இரண்டாவது மாங்காய், இந்தியாவுக்கும் தனக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைப்பது.மூன்றாவது,இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவை பங்காளியாக்குவது.அவ்வாறு இந்தியாவை இனப் பிரச்சினைக்கான தீர்வில் பங்காளி ஆக்கினால் தமிழ்த் தரப்பு 13ஐ விட கூடுதலாகக் கேட்கும்போது முரண்பாடு தமிழ்த் தரப்புக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்படும் என்ற எதிர்பார்ப்பும் ரணியிலிடம் இருக்கக்கூடும்.

எனவே ரணில் 13 ஐ தாண்டி வருவது கடினம். வந்தாலும் தமிழ்த் தரப்பு கேட்கும் சமஸ்ரியெல்லாம் கிடையாது. இதை விளங்கிக்கொண்டு பேச்சு வார்த்தைக்கு போக வேண்டும். இல்லையென்றால் நூற்றாண்டு கால அனுபவத்தின் பின்னும் ஏமாற்றப்பட்டோம் என்று கூறும் தமிழர்களைத்தான் உலகத்தின் அதிசயம் என்று கூற வேண்டியிருக்கும்.