முல்லைத்தீவில் இலங்கை தமிழரசு கட்சி உட்பட பல வேட்புமனுக்கள் நிராகரிப்பு!
எதிர்வருகின்ற மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் இறுதி தினம் இன்றையதினம் (21) என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அங்கிகரிக்ப்பட்ட பல கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இன்றைய தினம் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளிலும் போட்டியிடுவதற்காக 35 வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டிருந்தன.
கரைதுறைப்பற்று பிரதேச சபைக்காக 14 கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களும், புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்காக 9 கட்சிகளும் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்காக 6 கட்சிகளும், துணுக்காய் பிரதேச சபைக்காக 6 கட்சிகளுமாக 35 வேட்பு மனுக்கள் இன்று நண்பகல் 12.00 மணி வரை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
12.00 மணி தொடக்கம் 1.30 மணிவரை ஆட்சேபனை தெரிவிப்பதற்கான நேரம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மாலை 6.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பிலான அறிவிப்பினை முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி துணுக்காய் பிரதேசத்தில் ஆறு கட்சிகளின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் மாந்தை கிழக்கிலும் ஆறு வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் 8 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 12 கட்சிகளும் 2 சுயேட்சைகுழுக்களும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 4 கட்சிகளினதும் ஜெயனாந்தன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்திய சுயேட்சைக் குழுவினுடைய வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் கட்சி, அபி நவ நிதாஸ் பெரமுன ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உரிய பெண் வேட்பாளர்கள் உள்வாங்கப்படாமை, உரிய முகவர்களால் வேட்புமனு கையளிக்கப்படாமை, உரிய நேரத்தில் வேட்புமனு கையளிக்கப்படாமையினால் குறித்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.