சிறுநீரக கல் பிரச்சினையும் அதற்கான தீர்வுகளும், உணவு முறைகளும்!
உங்களுக்கு சிறுநீரகத்தில் கல் இருக்கிறது என்பது உறுதியானால் உணவில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமானது. குறிப்பாக என்ன சாப்பிட வேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்? என்பதை அறிவதன் மூலம் சிறுநீரக கல் பிரச்சினையிலிருந்து முழுமையாக வெளிவரலாம்.
உணவில் சேர்க்க வேண்டியவை
* நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளான வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, பரங்கிக்காய் (பூசணிக்காய்), சுரைக்காய், புடலங்காய், செளசெள போன்ற காய்களை எடுத்துக் கொள்ளலாம்.
* இதனோடு வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிசாறு போன்ற நீர்ச்சத்து நிறைந்தவற்றை சாறாக்கி குடித்து வருவதும் நன்மை பயக்கும். சிறு தானியங்களையும் உணவில் சேர்த்து வரவேண்டும். எனினும் திரவ உணவுகள் சிறுநீரக கற்களை வெளியேற்றுவதோடு மீண்டும் வரவிடாமல் தடுப்பதால் திரவ ஆகாரங்களை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. மேலும், காரட், பாகற்காய் போன்ற காய்கள் சிறுநீரகக்கற்களின் படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கிறது.
* சிட்ரிக் அமிலம் அதிகமுள்ள ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி போன்ற பழங்களுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பருகுவது கூட கல்லை கரைத்து வெளியேற்ற உதவும். மேலும் வாழைப்பழம், அண்ணாச்சி, தர்பூசணி, பப்பாளி, மாதுளை, நெல்லி போன்றவை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
* நாம் அதிகமான அளவு நீர் அருந்துதல், இளநீர், பழச்சாறுகள் போன்றவற்றை அருந்துதல் போன்றவை சிறு நீரககற்களை குறைக்க உதவியாக இருக்கும். பொதுவாக சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க தினமும் 3-4 லிட்டர் வரை தண்ணீர் பருகுவது அவசியமாகும்.
தவிர்க்கக் கூடிய உணவுகள்:
* உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்வது அவசியமாகும். மேலும் காரம், புளி, மசாலா போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். கேழ்வரகு, கீரைகள், கருணைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளான தயிர், நெய், வெண்ணெய், பால்கோவா, பால் அல்வா போன்ற கால்சியம் மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவுகளை அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* காபி, தேநீர், குளிர் பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட், பாக்கெட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற பாஸ்பேட் நிறைந்த உணவுகளை உண்பதை நிறுத்திக் கொள்வது அவசியம். * மேலும் இத்துடன் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.