ரணில் இந்தியாவை நெருங்கிச் சொல்கிறாரா? நிலாந்தன்.
ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதை இந்தியா விரும்பவில்லை என்று கருதப்பட்டது. ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பின் பொழுது இந்தியா டளஸ் அழகப்பெரும ஆதரிக்குமாறு கூட்டமைப்பிடம் கேட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
இலங்கைத் தீவு இப்பொழுது முப்பெரும் பேரரசுகளின் இழு விசைகளுக்குள் சிக்கியிருக்கிறது. இன்னிலையில் ஒரு பேரரசை நோக்கி அதிகம் சாயும் ஒரு தலைவர் ஒப்பீட்டளவில் பேரவலம் குறைந்த பலவீனமான ஒரு தலைவராகவே இருப்பார்.
அதனால்தான் சீனாவை நோக்கி சாய்ந்த மஹிந்த உள்நாட்டில் ஜனவசியம் மிக்க ஒரு தலைவராக இருந்தார். ஆனால் நாட்டுக்கு வெளியே அவருக்கு அந்த அளவுக்கு அங்கீகாரம் இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டுக்குள் அங்கீகாரம் இப்பொழுதும் இல்லை. ஆனால் அனைத்துலக அரங்கில் அவர் ஒப்பீட்டளவில் அதிகம் எதிர்பார்ப்போடு பார்க்கப்படும் ஒரு தலைவர்.
ஏனென்றால் அவர் எல்லா பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்திருக்கக்கூடிய ஒருவர்.அப்படிப்பட்ட முதிர்ச்சியான ஒருவரை விடவும் முதிர்ச்சியும் அனுபவமும் அங்கீகாரமும் குறைந்த டளஸ் அழகப்பெரும வைக் கையாள்வது இலகுவானது என்று இந்தியா கருதியிருக்கக் கூடும்
தாமரை மொட்டுக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பொருத்தமான ஒரு முன் தடுப்பாக ரணிலே காணப்படுகிறார். அதனால் அவர் ஜனாதிபதியாக வருவதை இந்தியாவால் தடுக்க முடியவில்லை. யாராலும் தடுக்க முடியாது. ஏனென்றால் தாமரை மொட்டுக்கள் நாடாளுமன்றத்தில் இப்பொழுதும் பலமாக காணப்படுகின்றன.
இவ்வாறான ஒரு பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்ததும் இந்தியா அவரை அதிகம் வரவேற்கவில்லை என்று கருதப்படுகிறது. பொதுவாக இலங்கைத்தீவின் ஆட்சித்தலைவர் பதவியேற்றதும் முதலில் செல்லும் நாடு இந்தியாதான். ஆனால் ரணில் இன்றுவரை இந்தியாவுக்குப் போகவில்லை அல்லது இந்தியா அவரை வரவேற்கவில்லை?
இந்தியாவை நெருங்கிச் செல்ல அவர் எடுத்த முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை என்றும் கருதப்படுகிறது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் அன்மையில் இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் கொழும்புக்கு வந்து சென்றதாக தகவல்கள் வெளிவந்தன.இதை எந்த ஒரு தரப்பும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.ஆனால் அவருடைய வருகைக்குப்பின் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இந்தியாவை கவரும் விதத்தில் தொடர்ச்சியாக நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது.
அடுத்த சுதந்திர தின விழாவில் இந்திய பிரதமரை அல்லது ஜனாதிபதியை பிரதான விருந்தினராக அழைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. அவ்வாறு இந்திய தலைவர் ஒருவர் வருவதற்கு இந்தியாவை திருப்திப்படுத்தும் சில நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டி இருப்பதாக தெரிகிறது.அதன்படி அண்மை வாரங்களாக பின்வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முதலாவதாக, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை புனரமைக்கும் வேலைகள் இந்தியப் பெரு வணிக நிறுவனமான அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.
இரண்டாவதாக, மூடப்பட்டிருந்த பலாலி விமான நிலையம் கடந்த வாரம் மறுபடியும் இயங்கத் தொடங்கி இருக்கிறது.
மூன்றாவதாக, காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கு யாத்திரிகர் பயணிகள் சேவை ஒன்று அடுத்த ஆண்டிலிருந்து தொடங்கப்படும் என்று ஊகங்கள் நிலவுகின்றன. அதற்குரிய கட்டுமான வேலைகளை செய்து முடிப்பதற்கு ஆக குறைந்தது 8 மாத காலம் எடுக்கும் என்றும் அதனால் அந்த படகுச் சேவையை உடனடியாக தொடங்க முடியாது என்றும் தகவல் உண்டு.
மேலும் இது கடல் கொந்தளிக்கும் காலம் என்பதனால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்காலிகமாக அந்த சேவையை தொடங்கலாம் என்றும் ஓர் எதிர்பார்ப்பு உண்டு. இந்த சேவையைத் ஆரம்பிக்க வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே குரலெழுப்பி வருபவர் ஈழத்து சிவசேனை அமைப்பின் தலைவராகிய மறவன்புலவு சச்சிதானந்தம். அவர் அண்மையில் ஊடகங்களுக்கு அனுப்பிய தகவல்களின்படி இக்கப்பல்சேவையை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாலாவதாக, இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட யாழ்.கலாச்சார மையத்தை திறக்கும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இக் கலாச்சார மையத்தை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் விரும்பின. சீனாவால் கட்டிக் கொடுக்கப்பட்ட தாமரை மொட்டு கோபுரத்தைப் போல கலாச்சார மைய த்துக்கும் ஒரு அதிகார சபையை உருவாக்கி அதை நிர்வகிக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்பியதாக தெரிகிறது.
எனினும் இக்கலாச்சார மண்டபமானது தமிழ் மக்களுக்கான தனது பரிசு என்ற அடிப்படையில் அதனை தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கட்டமைப்பு நிர்வகிக்க வேண்டும் என்று இந்தியா விரும்பியதாக தெரிகிறது. அதன்படி யாழ் மாநகர சபை மேற்படி மண்டபத்தை நிர்வகிப்பதற்கு தேவையான நிதி உதவிகளை இந்தியா வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.இதற்கென்று பிரதான குழு ஒன்றும் உப குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளன .
அடுத்த சுதந்திர தின விழாவையொட்டி இம்மண்டபம் திறக்கப்படக்கூடும். இந்திய அரசுத் தலைவர்களில் யாராவது ஒருவர் இந்த மண்டபத்தை திறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முதலில் பிரதமர் மோடி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்பொழுது இந்திய ஜனாதிபதி வரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.அடுத்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தை கலாச்சார மண்டபத் திறப்பு விழாவோடு யாழ்ப்பாணத்திலும் கொண்டாடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதில் இந்தியத் தலைவர் ஒருவரை அழைப்பதன் மூலம் அரசாங்கம் பல்வேறு இலக்குகளை ஒரே சமயத்தில் அடைய முயற்சிக்கின்றதா?
ரணில் விக்ரமசிங்கே தமிழ்க் கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருக்கும் ஒரு பின்னணியில், இந்தியாவை நோக்கி நெருங்கி செல்வது என்பது அவருக்கு சாதகமான விளைவுகளைக் கொடுக்கும். இந்தியாவுடனான உறவுகளை சீர்செய்ய முடியும்.அதேசமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவை அரசாங்கத்துக்குச் சாதகமாகக் கையாள முடியும்.அதை நோக்கி அவர் புத்திசாலித்தனமாக நகரத் தொடங்கி விட்டார்.
அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதில் இருந்து இந்தியாவை நெருங்கிச் செல்வதற்கு முயற்சித்து வருகிறார். எனினும் இந்தியா அவரை முழுமையாக நெருங்கி வரவில்லை என்று தெரிந்தது.ஆனால் அண்மை வாரங்களாக அவர் அந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருப்பதாகத் தெரிகிறது.அரசுடைய இனமாக இருப்பதில் உள்ள அனுகூலம் அதுதான். அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகளின் மூலம் அவர்கள் இடைவெளிகளைக் கவனமாகக் கையாள முடிகிறது.
ஆனால் தமிழ்த் தரப்போ அரசற்றது. இந்தியா உட்பட எல்லா பேரரசுகளும் இலங்கைதீவில் கொழும்பைக் கையாள்வதைத்தான் தமது பிரதான ராஜிய வழிமுறையாக கொண்டிருக்கின்றன. அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த வை.கோபால்சாமி எழுப்பிய ஒரு கேள்விக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் வழங்கிய பதிலில் அதைக் காண முடிகிறது.பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா கொழும்புக்கு வழங்கிய உதவிகள் முழு நாட்டுக்குமானவை, எல்லா இனங்களுக்குமானவை என்று அவர் கூறுகிறார் .அதாவது கொழும்பில் உள்ள அரசாங்கத்தை கையாள்வதுதான் தொடர்ந்தும் இந்தியாவின் அணுகுமுறையாக காணப்படுகிறது.
கடந்த 13 ஆண்டுகளாக இலங்கைத்தீவில் இந்தியாவின் பிடி ஒப்பீட்டளவில் பலவீனமாகவே காணப்படுகிறது. முன்னைய அரசாங்கங்கள் இந்தியாவோடு இணங்கி ஏற்றுக்கொண்ட உடன்படிக்கைகளிலிருந்து பின் வந்த அரசாங்கங்கள் பின்வாங்கின. உதாரணமாக கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம்,பலாலி விமான நிலையத் திறப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.மேலும், வடக்கில் கடலட்டைப் பண்ணைகளின் மூலம் சீனா உள் நுழைவதாக இந்தியா சந்தேகிக்கிறது.அதேசமயம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதார நெருக்கடியின்போது இலங்கைக்கு முதலில் புதிய நாடாக இந்தியா காணப்படுகிறது. அந்த உதவிகளின்மூலம் இந்தியா ஆறு உடன்படிக்கைகளைச் செய்து கொண்டது.
அவற்றில் முக்கியமானது எம்.ஆர்.சி.சி என்று அழைக்கப்படும் கடல்சார் மீட்பு நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு உடன்படிக்கையாகும்.மேலும் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் ஏற்கனவே இந்தியாவும் இலங்கையும் ஒப்புக்கொண்ட உடன்படிக்கையை முன்நகர்த்தும் விடயத்தில் இந்தியாவுக்கு சாதகமான திருப்பங்கள் ஏற்பட்டன. எனினும் வடக்கிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இணைப்பு திட்டங்கள் பொறுத்து, கொழும்பு இழுத்தடிக்கும் ஒரு போக்கை கடைப்பிடித்து வந்தது.
ஆனால் அன்மை வாரங்களில் ரணில் விக்கிரமசிங்க டெல்லியை நெருங்கி செல்வதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறி இருப்பதாக தெரிகிறது. அதாவது இந்தியாவுடனான உறவுகளை அவர் சீர்செய்யத் தொடங்கிவிட்டார்.இது எதிர்காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?